ஏப்ரல் 21 தாக்குதலுக்கு நல்லாட்சி அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் – கோட்டா

25.11.2021 05:54:57

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உயர் தொழில்நுட்பத்துடன் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘கல்யாணி பொன் நுழைவாயிலை’ நேற்று (24) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

தொடர் நடவடிக்கைகளுக்காக நீதியரசர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஆகியவற்றிடமும் கையளிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ள குற்றவாளிகளுக்கு எதிராகச் சட்டத்தை நிறைவேற்ற முடியும்.

அதற்கு அவசியான மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் அரசாங்கத்துக்கு உள்ளது.

அதனால் கோரிக்கைகளை முன்வைக்கும்போது கவனமாக இருப்பதுடன், மக்களை ஏமாற்ற வேண்டாம் என எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.