அரசின் திட்டங்களை விமர்சனம் செய்தால் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை!

23.10.2026 08:36:36

அரசு ஊழியர்கள் மத்திய அல்லது மாநில அரசின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளைப் பொதுவெளியிலோ, ஊடகங்களிலோ அல்லது பொதுக்கூட்டங்களிலோ பாதகமாக விமர்சிக்கக் கூடாது எனவும், மீறி விமர்சிக்கும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி, அரசு ஊழியர்கள் மத்திய அல்லது மாநில அரசின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளைப் பொதுவெளியிலோ, ஊடகங்களிலோ அல்லது பொதுக்கூட்டங்களிலோ பாதகமாக விமர்சிக்கக் கூடாது. பிற அரசுகளுடனான நல்லுறவைப் பாதிக்கும் வகையிலான கருத்துகளை எக்காரணம் கொண்டும் வெளியிடக் கூடாது.

அரசை விமர்சிக்கும் தீர்மானங்கள் அல்லது உரைகள் இடம்பெறும் அலுவல் சாராத கூட்டங்களில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது. எனவே, இத்துறையில் பணிபுரியும் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் மேற்கண்ட விதிமுறைகளைக் தவறாது பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விதிகளுக்கு மாறாகச் செயல்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு ஊழியர் நடத்தை விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.