கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி விவகாரம்; கனடா,அமெரிக்கா தலையீடு?

12.09.2023 09:57:33

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணிகள் இன்று 6 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நேற்று ஆரம்பமான 54 ஆவது ஜெனிவாக் கூட்டத்தொடரின்போதும் கொக்குத்தொடுவாய் விவகாரமானது சர்வதேசத்தின் கவனத்தை பெற்றிருந்தது.

இதுதொடர்பாக தங்களின் நிலைப்பாடுகளை அறிவித்த அமெரிக்கா மற்றும் கனடா பிரதிநிதிகள், கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் உரியவாறு முன்னெடுக்கப்படவேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட அமெரிக்கப் பிரதிநிதி, இலங்கை தொடர்பான உயர்ஸ்தானிகரின் அறிக்கையை வரவேற்பதாகக் குறிப்பிட்டதுடன் ஊழல் ஒழிப்புச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டமை, பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட பலர் விடுவிக்கப்பட்டமை உள்ளடங்கலாக இலங்கையால் முன்னெடுக்கப்பட்ட முன்னேற்றகரமான நடவடிக்கைகளைப் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மையின மக்களுக்குச் சொந்தமான காணிகள் அபகரிக்கப்படும் சம்பவங்கள் குறித்தும் அவர் கரிசனையை வெளிப்படுத்தினார்.

மேலும், பயங்கரவாதத்தடைச்சட்டம் சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இதனையடுத்து உரையாற்றிய கனேடியப் பிரதிநிதி, இலங்கையின் அண்மையகால மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாக தீவிர கரிசனையை வெளிப்படுத்தினார்.

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாயில் கண்டறியப்பட்டுள்ள மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகள் மற்றும் விசாரணைகள் என்பன உரியவாறு முன்னெடுக்கப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்வதற்குரிய அர்த்தமுள்ள நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.