அரசாங்கத்தின் இருப்பு கேள்விக்குறி!
|
நாட்டில் தற்போது நிலவும் சூழலானது கடந்த 16 மாதங்களுக்கு முந்தைய நெருக்கடி நிலையையே நினைவுபடுத்துகின்றது. குறைந்த விலைக்கு எரிபொருள் தருவதாகக் கூறிவிட்டு தற்போது அதிக வரி விதித்து அரசாங்கம் மக்களைச் சுரண்டுகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில், அரசாங்கத்தின் இருப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். |
|
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் தற்போது இடம்பெறும் நிகழ்வுகள் கடந்த 16 மாதங்களுக்கு முன்னர் காணப்பட்ட நிலைமையை நினைவுபடுத்துகின்றன. அந்தக் காலப்பகுதியில் தேர்தல் பிரசாரங்களின் போது கப்பலிலிருந்து தரையிறக்கும் பெருமதிக்கே நுகர்வோருக்கு எரிபொருளை வழங்குவோம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாக்குறுதியளித்தார். ஆனால் இன்று 128 ரூபா வரி விதித்து 400 ரூபாவுக்கு எரிபொருள் விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோன்று அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் குறைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதுவரையில் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக அவற்றின் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் போக்கினையே காண்பிக்கின்றன. 2022 நெருக்கடி காலப்பகுதியிலும் உலக சந்தை விலை அதிகரிப்பிற்கேற்ப உள்நாட்டிலும் விலை அதிகரிகரிக்கப்படுமாயின் அரசாங்கம் என்ற ஒன்று எதற்கு என்று கேள்வியெழுப்பினர். நாட்டு மக்களும் அதனை அங்கீகரித்தனர். தற்போது எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு அப்பால் நிலக்கரி மோசடியால் தான் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியேற்பட்டுள்ளது. தென் ஆபிரிக்காவிலிருந்து தான் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகின்றது. மாறாக ஈரானிலிருந்தோ அல்லது மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தோ அல்ல. நிலக்கரி மோசடியை தவிர்ப்பதற்கான வாய்ப்புக்கள் பல கிடைத்த போதிலும், அமைச்சர் குமார ஜயக்கொடி அதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை. தற்போது அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அது அரச அதிகாரியாக இருந்த போது இடம்பெற்ற சம்பவத்துக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஆளுந்தரப்பு அதனை நியாயப்படுத்துகின்றது. குமார ஜயக்கொடி மாத்திரமின்றி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்றார். |