பழவேற்காடில் குவிந்த சுற்றுலா பயணியர்

16.01.2022 05:51:27

வழக்கமாக காணும் பொங்கல் நாளில் சுற்றுலா பயணியர் பழவேற்காடில் குவியும் நிலையில், ஊரடங்கு எதிரொலியால் நேற்று, கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் உற்சாகமாக கூடினர்.பழவேற்காடு சுற்றுலா பகுதியில், ஆங்கில புத்தாண்டு, காணும்பொங்கல் உள்ளிட்ட விசேஷ நாட்களில் பயணியர் அதிகளவில் கூடுவர். குறிப்பாக காணும் பொங்கல் தினத்தன்று கிராமங்களில் இருந்தும் மக்கள் அதிகளவில் வந்து செல்வர்.தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

காணும் பொங்கல் தினமான இன்று முழு ஊரடங்கு என்பதால், சுற்றுலா பயணியர் நேற்றே பழவேற்காடு கடற்கரையில் குவிந்தனர்.சுற்றுலா பயணியர் குடும்பத்தோடு கடற்கரையில் அமர்ந்து கடலின் அழகை ரசித்தபடி வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை சாப்பிட்டு ஜாலியாக இருந்தனர்.சிறுவர், சிறுமியர், பெரியவர்கள், பெண்கள் என வயது வித்தியாசமின்றி கடலில் உற்சாகமாக குளித்து விளையாடினர். இன்று, இறைச்சி கடைகள் இருக்காது என்பதால் பழவேற்காடு மீன் மார்க்கெட்டிலும், சுற்றுலா பயணியர் குவிந்தனர். மீன், இறால்களை வாங்கி சென்றனர்.கடற்கரையிலும், மீன் மார்க்கெட்டிலும் உற்சாகமாகக்கூடிய சுற்றுலா பயணியர் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்தனர்.