சினிமா ஸ்டைல்' சட்டமன்றம்.

24.06.2026 08:18:45

தமிழ்நாடு சட்டமன்றத்தின் பாரம்பரியமான பாணி இப்போது முற்றிலும் மாறிவிட்டதாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். முன்பெல்லாம் சட்டசபையில் அடுக்குமொழி சொற்களுடனும், தூய தமிழிலும் தலைவர்கள் விவாதிப்பதே வழக்கமாக இருந்தது. ஆனால், தற்போதைய முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவருமே சாதாரண மக்கள் பேசும் எளிய தமிழ் மொழியில்தான் தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

கடந்த சில நாட்களாக உதயநிதி பேசிய விதம் ஒரு சினிமா மாடல் போலவும், முதலமைச்சர் விஜய் அதற்கு பதிலளித்துப் பேசியது ஒரு அசல் சினிமா வசனம் போலவும் இருந்ததாக மாணிக்கம் தாகூர் விவரித்துள்ளார். காலத்திற்கு ஏற்ப இந்த மாற்றத்தை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்றும், பழைய பாணியிலேயே விவாதங்கள் தொடர்ந்தால் இன்றைய இளைய தலைமுறையினர் அதை ரசிக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

இன்றைய சட்டமன்றம் இளைஞர்கள் விரும்பிப் பார்க்கும் வகையில் சுவாரசியமாக மாறியுள்ளது. எனவே, இந்த புதிய மாடல் சட்டமன்றத்தை முன்பை விட அதிகளவிலான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் நேரலையில் பார்ப்பார்கள் என்று தான் நம்புவதாகவும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.