இரு விவாதங்களை கொண்டுவருமாறு அவரச கடிதம்!
பாராளுமன்றத்தில் இரு அவசர விவாதங்களை கொண்டுவருமாறு கோரி மொட்டுக் கட்சியின் பிரதான செயலாளர் சாகர காரியவசம் எதிர்க் கட்சித் தலைவருக்கு அவசர கடிதம் ஒன்றை இன்று (08.11.2026) அனுப்பியுள்ளார்.அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள்
நாட்டில் புத்த சாசனத்திற்கும் பிக்குகளுக்கும் எதிராக இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் மற்றும் நீதிபதிகள் திடீரென இடமாற்றம் செய்யப்படுகின்றமை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்துவதற்கான கோரிக்கையே அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு அரசியலமைப்பின் மூலம் புத்த சாசனத்தைப் பாதுகாத்து போஷிப்பதற்கு அரசிற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பைப் புறக்கணித்தல், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களின் சில செயற்பாடுகள் மற்றும் தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவான சமூக ஊடக வெளிகளில் பிக்குகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் குறித்து தீவிர அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
அரசாங்கத்திற்கு பாதகமான அல்லது அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கேள்விக்குட்படுத்தி தீர்ப்பளித்த நீதிபதிகள் திடீரென இடமாற்றங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றமை தொடர்பிலும் சமூகத்தில் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும், நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையையும் பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதுகாப்பதற்காக இது குறித்து வெளிப்படைத்தன்மையுடன் தெளிவுபடுத்துவது அவசியமானது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
முன்னெடுக்கப்படவுள்ள வரவு-செலவுத் திட்ட விவாதத்தின் பணிப்பளு காரணமாக இவ்வாறான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் மறைந்து போகும் அபாயம் காணப்படுவதால், வரவு-செலவுத் திட்டத்திற்கு முன்னதாகவோ அல்லது அதற்கு இடைப்பட்ட காலத்திலோ இவ்விடயங்கள் தொடர்பில் விவாதங்களை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.