உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன் கை கோர்க்க தே.மு.தி.க. முடிவு

30.07.2021 11:10:58

கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் பல நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால் கடைசி நேரத்தில் கூட்டணிக்கான வாய்ப்பு ஏற்படாமல் போய் விட்டது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறிய தே.மு.தி.க., டி.டி.வி.தினகரன் கட்சியான அ.ம.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

ஆனால் தே.மு.தி.க.வால் ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை.

தே.மு.தி.க. தொடங்கப்பட்ட பிறகு ஒரு சட்டமன்ற தேர்தலை தனித்து சந்தித்தது. 2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது. அப்போது அந்த கட்சி வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பிடித்தது.

கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்று தோல்வியை தழுவியது. சட்டமன்ற தேர்தலிலேயே தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

இந்த நிலையில் தேர்தல் தோல்விக்கு பிறகு தே.மு.தி.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். எல்.கே.சுதீஷ், விஜயபிரபாகரன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
 

அப்போது விஜயகாந்தின் உடல்நிலை பற்றி கேட்டறிந்த மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அவரை சந்திப்பதாக கூறி இருந்தார்.