காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி.

26.11.2025 14:45:38

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திப் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளோம் என துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்தார்.

    

 

பாராளுமன்றத்தில் நேற்று (24) திங்கட்கிழமை இடம்பெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

‘‘இலங்கையின் பிரதான துறைமுகமாகவும் சர்வதேச மட்டத்திலான கப்பல் மார்க்கத்தின் பிரதான கேந்திரமாகவும் கொழும்பு துறைமுகம் காணப்படுகிறது. இந்த துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகள் 2026ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதமளவில் நிறைவடையும். இதனூடாக 2.5 மில்லியன் டொலர் வருவாய் ஈட்டிக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தி பணிகள் எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும். கொழும்பு துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகளை எதிர்வரும் ஆண்டுக்குள் நிறைவு செய்து, பணிகள் மற்றும் சேவைகளை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மற்றும் தேசிய மட்டத்திலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கு கடந்த காலங்களில் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இருப்பினும் ஒருசில காரணிகளால் அந்த பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவில்லை.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில் மாற்று யோசனைகளை நாங்கள் இந்தியாவிடம் முன்வைத்துள்ளோம். இதுதொடர்பில் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளோம். இலங்கை இந்தியா கூட்டுத்தன்மையுடன் இந்த அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது குறித்து இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்திசெய்ய இந்தியா ஆரம்பத்தில் கடன் வழங்கவே இணக்கம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது 63.15 மில்லியன் டொலரை நிவாரணமாக வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த அபிவிருத்திப் பணிகள் எதிர்வரும் ஆண்டு முன்னெடுக்கப்படும்.

காலி துறைமுகத்தை சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்குரிய அபிவிருத்திப் பணிகள் வெகுவிரைவில் மேற்கொள்ளப்படும்.

போஹம்பர பழைய சிறைச்சாலையை சுற்றுலாத்துறை மேம்பாட்டுத்தலமாக மாற்றியமைக்க அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. இந்த சிறைச்சாலையில் தொல்லியல் மற்றும் புராதன அம்சங்கள் பற்றி தொல்லியல் அறிக்கை கோரப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை கிடைத்தவுடன் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.