அரசின் வழக்கை எதிர்கொள்ளத் தயார்!
|
யுத்தத்தில் உயிர்நீத்த இராணுவ வீரர்களின் நினைவுத்தூபிக்கு அருகில் அஞ்சலி செலுத்த முற்பட்டமைக்காக அரசாங்கம் வழக்குத் தொடருமானால், அதனை எதிர்கொள்ள தான் எவ்வகையிலும் தயங்கப் போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். |
|
நாட்டின் பொருளாதாரம் மற்றும் ரூபாவின் பெறுமதி என்பன கட்டுப்பாடின்றி வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், அதனை மூடிமறைப்பதற்காகவே அரசாங்கம் பொலிஸாரைப் பயன்படுத்தி இவ்வாறான நாடகங்களை அரங்கேற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். புதன்கிழமை கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், யுத்தத்தில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கான நினைவுத்தூபிக்கு அருகில் சென்று, மலர்களை வைத்து, அந்த வீரர்களை நினைவு கூர்ந்து, அவர்களுக்கு எமது கௌரவத்தைச் செலுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என்றால், அத்தகைய வழக்கிற்கு முகம் கொடுக்க நாம் எந்த வகையிலும் தயங்கப் போவதில்லை. இன்று இந்த நாட்டில் என்ன நடக்கிறது? நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் சீரழிந்து கொண்டிருக்கிறது. கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் ரூபாயின் பெறுமதி சரிந்து வீழ்ந்து கொண்டிருக்கிறது. இதில் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை, எந்தவொரு தந்திரோபாய மூலோபாய தலையீடுகளும் இல்லை. இவை எவையும் இன்றி, வெறுமனே பொலிஸாரைப் பயன்படுத்தி உணர்ச்சிகரமான நாடகங்களை அரங்கேற்றுவது மாத்திரமே இந்த அரசாங்கம் செய்து வரும் ஒரே செயலாகும். பொருளாதாரம் நன்றாக இருப்பதாகக் கூறுகிறார்கள். பொருளாதாரம் நன்றாக இருந்தால் அது மக்களுக்குப் புரிய வேண்டுமல்லவா? கடைகளுக்குச் சென்று பொருட்களின் விலைகளைக் கேட்கும் போது பொருளாதாரம் நன்றாக இருக்கிறதா என்பது விளங்கும். மக்கள் வாழ்வதற்கான கஷ்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறதே தவிர குறைவடையவில்லை. அரசாங்கத்தின் வெற்றுப் பேச்சுகளைக் கேட்பதால் மக்களின் வயிறு நிறைந்துவிடுமா? நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி, தானாகவே எங்கோ போய்க்கொண்டிருக்கும் ஒரு பொருளாதாரமாகவே மாறியுள்ளது. அது நாட்டை மிகப்பெரிய ஒரு அழிவுப் பாதையை நோக்கி, படுகுழியை நோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது. பாராளுமன்றத்திலிருக்கும் எதிர்க்கட்சியினர் தங்களது பொறுப்பை சரியாகச் செய்கிறார்களா இல்லையா என்பது இன்று சமூகத்தின் மத்தியில் ஒரு கடுமையான விவாதப் பொருளாகவும் பிரச்சினையாகவும் மாறியுள்ளது. ஏனெனில் எதிர்க்கட்சியினரை வெளியில் காணக் கூடக் கிடைப்பதில்லை. ஆனால், பாராளுமன்றத்துக்கு வெளியே இருக்கும் எதிர்க்கட்சியாக நாம் எமது கடமையையும் பொறுப்பையும் மிகவும் அர்ப்பணிப்புடன் நிறைவேற்றி வருகிறோம் என்றார். |