தமிழரின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு.

14.02.2026 13:31:16

தமிழ் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி விட்டு அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்ற ஆரம்பக்கால நிலைப்பாடு பிற்பட்ட காலத்தில் தவறாக அமைந்தது. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் நாடு என்ற ரீதியில் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாதென முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கை மன்றக்கல்லூரியில் வன்டெக்ஸ்ட் இன்னிஸியேட்வின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை (12) நடைபெற்ற அவரது ‘இலங்கையில் சமாதானப்பேச்சுவார்த்தை முன்னெடுப்பு: ஒரு உள்ளக பார்வை' எனும் நூல் பற்றி நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்றளவில் புதிய அரசியல் உருவாக்கத்துக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை கூட முன்னெடுக்கவில்லை.குறைந்தபட்சம் ஒரு கருத்தாடல் கூட இடம்பெறவில்லை.

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. அரசியலமைப்பு தொடர்பில் மக்களின் சிந்தனையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் முற்போக்கான நிலைப்பாட்டில் உள்ளார்கள். ஆகவே புதிய யாப்புருவாக்கத்துக்கான நடவடிக்கைகளை அரசாங்கம் சிறந்த முறையில் வெளிப்படையாக முன்னெடுக்கலாம்.

இந்தியாவின் தலையீட்டுடன் தான் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மற்றும் அதிகார பகிர்வு தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளில் இந்தியா விடுதலை புலிகள் அமைப்பை ஒரு பங்காளியாக கொள்ளவில்லை.

யுத்தம் முடிவடைந்தவுடன் அந்த மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.அதன் பின்னர் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று ஆரம்பத்தில் கருதப்பட்டது. ஆனால் அது தவறென்று பிற்பட்ட காலத்தில் உணரப்பட்டது.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் நாடு என்று ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் அரசியலமைப்பின் ஊடாக முரண்பாடற்ற வகையில் தீர்வு காண வேண்டும் என்றார்.