விண்வெளி ஆய்வில் திருப்புமுனை கருந்துளைக்கு பின்னால் ஒளி

02.08.2021 09:55:24

கருந்துளை என்பது பிரபஞ்சத்தில் திருப்பங்கள் நிறைந்த‌ ஆச்சரியப்பட வைக்கும் விஷயங்களில் ஒன்று. அண்டத்தில் வேகமாக நகரும் துகள்கள் மட்டுமல்ல; ஒளியும் கூட  தப்பிக்க முடியாத அளவுக்கு தீவிர ஈர்ப்பு சக்தியை இது கொண்டுள்ளது. வான்வெளியில் உள்ள‌ நட்சத்திரம் நிறைவு காலத்தில் கருந்துளையாக மாற்றமடைகிறது.

அப்போது, அதன் ஈர்ப்பு விசை அதிகமாகி சுற்றி இருக்கும் பொருட்களை தனக்குள் இழுக்கும். பிரபஞ்சத்தில் பல லட்சம் கருந்துளைகள் இருப்பதை விஞ்ஞானிகள்  உறுதிப்படுத்தி உள்ளனர்.

சூரியனை விட மூன்று மடங்கு பெரிய அளவில் இருக்கும் நட்சத்திரங்கள் கூட, கருந்துளையாக மாறும்போது ஒரு நகரின் அளவிற்கு சுருங்கிவிடும்.

இந்த கருந்துளைகளின் அடர்த்தி மிக அதிகமாக இருக்கும். பூமியிலிருந்து சில கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள கருந்துளை, முதல் முறையாக 2019ம் ஆண்டு புகைப்படம் எடுக்கப்பட்டது.

ஆரம்ப காலங்களில் கருந்துளைகள் வெறும் வெற்று இடங்கள் என்று நம்பப்பட்டது. இந்நிலையில், ஸ்டான்போர்ட் வானியல் ஆராய்ச்சியாளர் டான் வில்கின்ஸ் மற்றும் அவரது ஆராய்ச்சி குழுவினர், பூமியிலிருந்து 80 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள மிகப்பெரிய கருந்துளையின் பின்னால் இருந்து வெளிச்சம் வெளிப்படுவதை கண்டறிந்துள்ளனர்.

இது பற்றி இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது பொது சார்பியல் கோட்பாட்டில் முன்பே தெரிவித்துள்ளார். ஐன்ஸ்டீனின் கோட்பாட்டின்படி, ‘கருந்துளைக்குள் விழுங்கப்படும் நட்சத்திரங்கள், சிறுகோள்களின் ஒளி அலைகள் முற்றிலுமாக கருந்துளைக்குள் மறைந்து விடுவது இல்லை. இது, சில நேரங்களில் கருந்துளையின் மறுபக்கமோ அல்லது பின்புறத்திலோ தனது ஒளியை வெளிப்படுத்துவதை காண்பதற்கு சாத்தியமுள்ளது,’ என தெரிவித்துள்ளார்.

கருந்துளைக்குள் செல்லும் எந்த வெளிச்சமும் வெளியே வருவதில்லை என்ற கருத்து நிலவி வந்த நிலையில்,  கருந்துளையின் மறுபக்கத்தில் இருந்து ஒளி அலைகள் வெளியே வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து இருப்பது இதுவே முதல் முறை. விண்வெளி ஆராய்ச்சியில் இது மிகப்பெரிய திருப்புமுனையாக கருதப்படுகிறது.