சர்வதேச மாநாட்டை சீர்குலைக்கும் செயற்பாட்டுக்கு இடமளிக்கக் கூடாது!

20.08.2026 15:20:23

வடக்கு – கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டை சீர்குலைக்கும் செயற்பாட்டுக்கு தமிழ் மக்கள் இடமளிக்கக் கூடாது என மனித உரிமை செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

   

இவ்விடயம் தொடர்பில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எதிர்வரும் ஆகஸ்ட் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, வடக்கு – கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் சர்வதேச மாநாடு ஒன்று யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சர்வதேச மாநாட்டை சீர்குலைக்கும் நோக்கில், அரச ஆதரவு பெற்ற சில தரப்புகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.

குறிப்பாக, வடக்கு – கிழக்கு முழுவதும் நீண்டகாலமாக சர்வதேச நீதி கோரி போராடிவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைப் பிரித்து, அவர்களில் ஒரு பகுதியினரை தனியாக அணிதிரட்டி, அதே தினத்தில் கிளிநொச்சியில் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அறியப்படுகிறது.

இத்தகைய நடவடிக்கைகள், யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டின் முக்கியத்துவத்தையும் வலிமையையும் குறைப்பதுடன், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினையை இலங்கை அரசின் உள்ளக பொறிமுறைகளுக்குள் மட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு, குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் (OMP) ஊடான நடவடிக்கைகளுக்கு, மறைமுகமாக வலுச்சேர்க்கும் அபாயமும் காணப்படுகிறது.

நீண்ட காலமாக சர்வதேச நீதி கோரி போராடிவரும் வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மத்தியில் இவ்வாறான முயற்சிகள் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளன.

போராட்டம் என்ற பெயரில் தனிநபர்கள் அல்லது சில அமைப்புகள் முன்னெடுக்கும் இத்தகைய பிரித்தாளும் செயற்பாடுகள் தொடருமானால், எதிர்காலத்தில் சர்வதேச நீதிக்கான எமது நீண்டகாலப் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் ஆபத்து உள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் இணைந்து நீதிக்காக போராடிய 600க்கும் மேற்பட்ட உறவுகள், நீதி கிடைக்காமலேயே உயிரிழந்துள்ளனர். அவர்களின் தியாகத்தையும், இன்னும் உயிருடன் இருந்து நீதிக்காகப் போராடிவரும் சாட்சிகளின் குரலையும் நாம் புறக்கணிக்க முடியாது.

எனவே, உண்மையான நீதியை விரும்பும் அனைத்து தரப்பினரும் தனிப்பட்ட அரசியல் அல்லது அமைப்பு சார்ந்த வேறுபாடுகளைக் கடந்து, உயிருடன் இருக்கும் சாட்சிகளின் கரங்களைப் பலப்படுத்தி, வடக்கு – கிழக்கு மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான சர்வதேச நீதிப் பொறிமுறையை நோக்கிய போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.

நாம் அனைவரும் ஒற்றுமையுடன் பயணிப்பதன் மூலமே இலங்கை அரசை உண்மையான பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்துவதற்கான சர்வதேச அழுத்தத்தை வலுப்படுத்த முடியும்.

ஆகஸ்ட் 30ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச மாநாடு, காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் நீதிக்கான நீண்டகால போராட்டத்தை சர்வதேச மட்டத்தில் மேலும் வலுப்படுத்தும் முக்கியமான நிகழ்வாக அமைய வேண்டும்.

அதனை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சிக்கும் இடமளிக்காமல், நீதிக்காகப் போராடும் அனைத்து உறவுகளும், சிவில் சமூக அமைப்புகளும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் ஒன்றுபட்டு செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறோம். உள்ளக பொறிமுறை அல்ல, சர்வதேச நீதியே எமது கோரிக்கை” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.