முதல் ஒருநாள் போட்டி நடைபெறும் ஓவல் மைதானம் குறித்து சுவாரஸ்ய தகவல்

12.07.2022 10:43:05

ஓவல் மைதானத்தில் ஷிகர் தவான், அஜய் ஜடேஜா ஆகிய 2 இந்திய பேட்ஸ்மேன்கள் மட்டுமே சதமடித்துள்ளார்கள். ஓவல் மைதானத்தில் ரவீந்திர ஜடேஜாவை தவிர வேற எந்த இந்திய பவுலரும் ஒரு போட்டியில் 5 விக்கெட் எடுத்ததில்லை. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட்டில் தோல்வியடைந்து தொடரை 2-2 என சமன் செய்தது. அடுத்ததாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்நிலையில் ஒருநாள் தொடரை வெல்வதற்கு இரு அணிகளும் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் ஷிகர் தவான், முகமது சமி ஆகியோர் ஒருநாள் தொடரில் இணைகின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி காயம் காரணமாக முதல் ஒருநாள் போட்டியில் இருந்து விலகி உள்ளார். இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. ஓவல் மைதானம் குறித்த தகவல்களை காண்போம்:- உலகிலேயே பழமையான மைதானங்களில் ஒன்றான ஓவல் மைதானத்தில் கடந்த 1880 முதல் சர்வதேச போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

23000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள இம்மைதானத்தில் கடந்த 1973 முதல் பல வரலாற்றுச் சிறப்புமிக்க ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. இந்த மைதானத்தில் வரலாற்றில் இதுவரை மொத்தம் 74 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 30 போட்டிகளில் வென்றுள்ளன. 41 போட்டிகளில் சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளன. 3 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன.

இங்கு 49 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து 30 வெற்றிகளைப் பெற்று வலுவான அணியாக திகழ்கிறது. 17 போட்டிகளில் தோற்றது. 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது. இம்மைதானத்தில் 16 போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்தியா 6 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. 9 போட்டிகளில் தோற்றுள்ளது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிராக இம்மைதானத்தில் களமிறங்கிய 8 போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வியடைந்த இந்தியா 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்தது. 1 போட்டி ரத்து செய்யப்பட்டது.

இம்மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த டாப் 3 இந்திய பேட்ஸ்மேன்கள்: 1. ஷிக்கர் தவான் : 443 2. சச்சின் டெண்டுல்கர் : 209 3. ரோகித் சர்மா : 199 இந்த மைதானத்தில் ஷிகர் தவான் (125) மற்றும் அஜய் ஜடேஜா (100*) ஆகிய 2 இந்திய பேட்ஸ்மேன்கள் மட்டுமே சதமடித்துள்ளார்கள். இங்கு ஷிகர் தவான் மட்டும் அதிகபட்சமாக 3 சதங்கள் அடித்துள்ளார். அதேபோல் ரோகித் சர்மா அதிகபட்சமாக 3 அரை சதங்கள் அடித்துள்ளார். இங்கு தலா 8 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் உள்ளனர்.

இம்மைதானத்தில் ரவீந்திர ஜடேஜாவை தவிர வேற (5/36) எந்த இந்திய பவுலரும் ஒரு போட்டியில் 5 விக்கெட் எடுத்ததில்லை. இங்கு இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர் 352/5, ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக. குறைந்தபட்ச ஸ்கோர் 158 ஆல்-அவுட். பிட்ச் ரிப்போர்ட்: இங்கிலாந்தில் இருக்கும் மைதானங்களில் ஓவல் மைதானம் வரலாற்றில் பேட்டிங்க்கு அற்புதமாக சாதகமளிக்கும் வகையில் இருந்து வருகிறது.

இங்கு காணப்படும் ஃப்ளாட்டான பிட்ச்சில் கிடைக்கும் வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை நம்பி பேட்ஸ்மேன்கள் அதிரடியாக பெரிய ஷாட்களை விளையாடி ரன்களை குவிக்கலாம். போட்டி நாளன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்பதால் ஆரம்பகட்ட ஓவர்களில் புதிய பந்தை ஸ்விங் செய்யும் வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுப்பார்கள். மிடில் ஓவர்களில் திறமையான சுழல்பந்து வீச்சாளர்களுக்கு இம்மைதானம் கை கொடுக்கலாம். இங்கு சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 254 ஆகும். மேலும் இப்போட்டி பகலிரவாக நடைபெறுவதாலும் இங்கு இதற்கு முன் சேசிங் செய்த அணிகள் அதிகம் வென்றுள்ளதாலும் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.