இணையவழி கற்பித்தல் புறக்கணிப்பு போராட்டத்துக்கு ஆதரவு – திகாம்பரம்

02.08.2021 04:08:50

இணையவழி கற்பித்தல் புறக்கணிப்பு போராட்டத்துக்கு தமது முழுமையான ஆதரவு இருப்பதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவரும், நுவரெலியா மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் அறிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ஒரு சமூகத்தின் முன்னேற்றத்துக்கு ஆசிரியர்களின் பங்களிப்பு இன்றியமையாது என்றும், அவர்களது குறைபாடுகளை உடனடியாக தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் தீர்க்க வேண்டிய பல விடயங்களை தீர்க்காமல், புதுப்புது சட்டமூலங்களைக் கொண்டுவந்து தமக்கு சாதமான விடயங்களை சாதித்துக் கொள்ள பார்க்கிறது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

தற்போதைய கொவிட் பரவல் சூழ்நிலையில் மாணவர்களின் கல்வி நிலை வளர்ச்சிக்காக ஆசிரியர்கள் எடுத்துவந்த நடவடிக்கை இன்றியமையாதது.

ஆனால் தற்போது ஆசிரியர்களை வீதியில் இறங்கி போராட வைத்துவிட்டு, மாணவர்களின் கல்வி எதிர்காலத்தை அரசாங்கம் கேள்விக்குறியாக்கியுள்ளது.

எனவே இந்த விடயத்தில் அரசாங்கம் உடனடியாக அவதானம் செலுத்தி, ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் முன்வைக்கின்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பழனி திகாம்பரம் வலியுறுத்தியுள்ளார்.