உலக நாடுகள் இதுவரை உக்ரைன் இராணுவத்திற்காக செலவிட்ட தொகை

03.07.2022 10:48:25

ரஷ்ய படையெடுப்புக்கு எதிராக உக்ரைன் இராணுவ பலத்தை அதிகரிக்க உலக நாடுகள் பல ஆயுதங்களை அளித்து வருகிறது.

உக்ரைனுக்கு இதுவரை உலக நாடுகள் அளித்துள்ள இராணுவ தளவாடங்கள் மற்றும் நிதி தொடர்பில் முழு தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், ரஷ்ய தாக்குதல்களை எதிர்கொள்ள கனரக ஆயுதங்களை அளிக்குமாறு உக்ரைன் தொடர்ந்து மன்றாடி வருகின்றது.

ரஷ்யாவின் தரைப்படையை தகர்க்கும் வகையில் ஆயுதங்களை அளிக்குமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ளார் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி. நேட்டோ அமைப்பிடம் கோரிக்கை வைத்துள்ள அவர், நவீன ஆயுதங்களால் மட்டுமே ரஷ்யாவின் தாக்குதல்களை முறியடிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, ரஷ்யாவை தோற்கடிக்க தேவையான ஆயுதங்களை உக்ரைன் பெறாவிட்டால், நேட்டோ நாடுகள் ரஷ்யாவுடன் எதிர்கால போரை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.

இதுவரை 30கும் மேற்பட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளது. ஆனால் கனரக ஆயுதங்களை உக்ரைனுக்கு அளிக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தயக்கம் காட்டியே வருகிறது.

இதுவரை அமெரிக்கா மட்டுமே அதிக அளவிலான ஆயுதங்களை உக்ரைனுக்கு அளித்துள்ளது. இரண்டாவது இடத்தில் பிரித்தானியாவும் மூன்றாவது இடத்தில் போலந்தும் உள்ளது.

இந்த பட்டியலில் கனடா, ஜேர்மனி, நோர்வே, கிரேக்கம், அவுஸ்திரேலியா, ஸ்வீடன், பிரான்ஸ், டென்மார்க் மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகள் உதவியுள்ளது.

அமெரிக்கா இதுவரை 6.3 பில்லியன் டொலர் அளவுக்கு தொகையை உக்ரைனுக்கு என செலவிட்டுள்ளது. பிரித்தானியா இதுவரை 1.6 பில்லியன் டொலர் தொகையை செலவிட்டுள்ளது.

மேலும் 1.2 பில்லியன் தொகையை அளிக்கவும் முடிவு செய்துள்ளது. ஆனால், தற்போதைய சூழலில் தங்களுக்கு மேலதிக நிதி தேவை எனவும், இராணுவத்திற்காக மட்டும் 5 பில்லியன் டொலர் மாதம் தேவைப்படுவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.