மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து இன்று முதல் ஆரம்பம்

01.08.2021 05:11:00

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கமைவாக பஸ் மற்றும் ரயில் சேவைகளில் சுமார் 75 வீதம் இன்று முதல் செயல்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கண்டியில் நேற்று (31) ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் தெரிவித்தார்.

நாளாந்தம் தொழிலுக்காக செல்லும் பயணிகளுக்காக பஸ் மற்றும் ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதுடன் இடைப்பட்ட காலப்பகுதியில் பொதுவான போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என்றும் அவர் கூறினார்.

பாரிய அனர்த்த நிலைக்கு மத்தியில் பொது போக்குவரத்து சேவைகளை பயண்படுத்தும் போது கொவிட் 19 தொற்றில் தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு பயணிகள் சுகாதார பாதுகாப்பு விதி முறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் பயணிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு காரணமாக பஸ் மற்றும் ரயில்கள் இதுவரை சேவையில் ஈடுபடவில்லை.

எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் ஏற்கனவே இருந்த நேர அட்டவணையின்படி, போக்குவரத்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக இந்த போக்குவரத்துச் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

அதன்படி, இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மாத்திரமே பயணிகள் பயணிக்க முடியும். அதற்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.