அரசாங்கத்தின் முடிவின் ஆரம்பம்!
|
கலகொட அத்தே ஞானசார தேரரின் காவி உடையை அகற்றி, சிவில் உடையில் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தமை சட்டவிரோதமானதும், அரசியலமைப்புக்கு முரணானதும், சாசனத்துக்கு விரோதமானதுமாகும். இதுதொடர்பில் எதிர்காலத்தில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சாட்டினார். |
|
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று புதுக்கடை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அவரது காவி உடை அகற்றப்பட்டமை தொடர்பில் அவருக்கு நீதியை நிலைநாட்டக் கோரி நீதிமன்றத்துக்கு வருகை தந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஞானசார தேரருக்கு ஆதரவளிப்பதற்காக நீதிமன்றத்துக்கு வருமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த நாட்டின் மன்னர்கள் கூட காவி உடைக்கு தலைவணங்கியுள்ளனர். தவறுதலாக ஐந்து வருடங்களுக்கு அதிகாரத்துக்கு வந்த நாத்திகக் குழுவினரால், 2,300 வருடங்களாக இந்த நாட்டில் நிலவி வரும் சாசன வரலாற்றை மாற்றியமைக்க எங்களால் இடமளிக்க முடியாது. இந்த நாட்டுக்கு அந்நியமான நாத்திக அரசாங்கத்தால் ஞானசார தேரரின் காவி உடையை அகற்ற முடிந்தாலும், அவரது பிக்குத்துவத்தைப் பறிக்கும் அதிகாரம் அவர்களுக்கு கிடையாது. நேற்று அவர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது காவி உடை இல்லாதிருந்தாலும், அங்கு வந்திருந்த சட்டத்தரணிகளும் ஏனையவர்களும் அவருக்கு வழமைபோன்று வணக்கம் செலுத்தினர். ஒரு பிக்குவின் காவி உடையை அகற்ற வேண்டுமாயின், அவர் பிக்குத்துவத்தை இழக்கும் அளவிலான கடுமையான குற்றத்தைப் புரிந்திருக்க வேண்டும். குறிப்பாக திருட்டு, பாலியல் துஷ்பிரயோகம் அல்லது கொலை போன்ற குற்றங்களில் சட்டரீதியாக குற்றவாளியாக அறிவிக்கப்படும் சந்தர்ப்பத்தில், அவர் காவி உடை அணிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும் பிக்குத்துவத்தை இழக்கிறார். ஆனால், நீதிமன்றத்தில் எழுந்து அனுமதியின்றி பேசுவது பிக்குத்துவத்தை இழப்பதற்கான காரணம் என சட்ட நூலிலும் பௌத்த போதனை நூலிலும் குறிப்பிடப்படவில்லை. ஞானசார தேரருக்கு இதற்கு முன்னரும் வழக்குகள் இருந்துள்ளன. ஆனால், ஒருபோதும் அவரது காவி உடையை அகற்றி சிவில் உடையில் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்ததில்லை. சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 550ஆம் இலக்க நிரந்தர உத்தரவிலும், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் ஒருவருக்கு சாதாரண உடையில் வருவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த நடவடிக்கை சட்டவிரோதமானதும் அரசியலமைப்புக்கு முரணானதும் சாசனத்துக்கு விரோதமானதுமாகும். இதுதொடர்பில் நிச்சயமாக நீதிமன்ற நடவடிக்கை எடுப்போம். இந்த அரசாங்கம் தவறிழைத்துவிட்டது. நேற்று இடம்பெற்ற சம்பவம் இந்த அரசாங்கத்தின் முடிவின் ஆரம்பம் என அச்சமின்றி கூறுகிறோம். அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ போன்றவர்கள் கார்ல் மார்க்ஸின் அரசியல் சிந்தனைகள் தொடர்பான நூல்களைப் படித்திருக்கலாம். ஆனால், பௌத்த போதனை நூலைப் படிக்காதவர்களாக இருந்துகொண்டு இவ்வாறான கருத்துக்களைத் தெரிவிக்க முடியும். சாசன மரபுக்கு மதிப்பளித்து இதுவரை பிக்குகள் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அதனை மீறி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை நாம் மிகவும் பொறுப்புடன் எதிர்க்கின்றோம். இதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வோம் என்றும் கம்மன்பில மேலும் சுட்டிக்காட்டினார். |