திமுக விமர்சனத்தால் பரபரப்பு.

28.01.2026 13:20:20

தமிழகத்தில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு மற்றும் அதிகாரம் தொடர்பான கருத்து வேறுபாடுகள் முற்றி வரும் நிலையில், மதுரை மாநகர மாவட்ட திமுக செயலாளர் தளபதி காங்கிரஸை நோக்கி முன்வைத்துள்ள விமர்சனங்கள் பெரும் அரசியல் புயலை கிளப்பியுள்ளன.

மதுரையில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சிக்கு வார்டு அளவில் பூத் கமிட்டி அமைக்கக்கூட ஆள் கிடையாது என்று மிக கடுமையாகச் சாடினார். "நாங்கள்தான் காங்கிரஸ் கட்சியை தோளில் சுமந்து வெற்றி பெற வைத்து கொண்டிருக்கிறோம். எங்கள் தயவால் வெற்றி பெற்றுவிட்டு, எங்களிடமே ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது வேடிக்கையாக இருக்கிறது" என்று அவர் ஆவேசப்பட்டார். 

மேலும், மத்தியில் இந்தியா கூட்டணி வலுவாக இருப்பதற்கு மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகிய மூன்று தலைவர்கள் மட்டுமே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே கூட்டணிக்குள் சலசலப்புகள் இருந்து வரும் வேளையில்,  திமுக மாவட்ட செயலாளர் இவ்வாறு பேசியிருப்பது காங்கிரஸ் தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே இரு கட்சிகளுக்கும் இடையிலான விரிசலை அதிகப்படுத்தியுள்ளது.