தாம்பரம் மாநகராட்சியில் 5 நகராட்சி; 5 பேரூராட்சி இணைப்பு

13.09.2021 07:07:20

சென்னையின் நுழைவாயிலாக திகழும் தாம்பரம் மாநகராட்சிக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஐந்து நகராட்சிகள், ஐந்து பேரூராட்சிகளை இணைத்து, தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது.அரசின் இந்த புதிய அறிவிப்பால், புறநகர் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுவதோடு, சென்னை மாநகராட்சிக்கு நிகராக வளர்ச்சி அடையும் என, அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தமிழகத்தின் தலைநகரான சென்னை, அனைத்து துறைகளிலும் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், மாநகரின் மக்கள் தொகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தொழில், வேலை வாய்ப்பு, உயர் கல்வி, மருத்துவம் என பல காரணங்களால், சென்னையில் குடியேறுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், சென்னைக்கு இணையாக, புறநகர் பகுதிகளிலும் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லவாரம், பெருங்களத்துார் உள்ளிட்ட பல பகுதிகளில், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அடிப்படை கட்டமைப்புகள் இல்லை.அதிகாரப்பூர்வம்மேற்கண்ட பகுதிகள் புதிதாக உருவான, செங்கல்பட்டு மாவட்டத்தில் இருப்பதால், சென்னையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை, அங்கு செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

குறிப்பாக, குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், அடிப்படை சாலை வசதிகள் உள்ளிட்டவற்றை பெற, அப்பகுதி மக்கள் பெரிதும் போராடினர்.எனவே, தங்கள் பகுதிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் அல்லது தாம்பரத்தை தனி மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில், தாம்பரம் மாநகராட்சி குறித்த அறிவிப்பு வெளியானது.

இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். எனினும், எந்தெந்த பகுதிகளை இணைத்து மாநகராட்சி உருவாக்கப்படும் என்ற விரிவான விபரங்கள் வெளியாகாததால், மக்கள் குழப்பத்தில் இருந்தனர்.இந்நிலையில், சென்னையை ஒட்டி உள்ள, ஐந்து நகராட்சிகள், ஐந்து பேரூராட்சிகளை இணைந்து, தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படுவதாக, நேற்று வெளியான அதிகாரப்பூர்வ அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழிவகைஅதன் படி, தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார், செம்பாக்கம் ஆகிய ஐந்து நகராட்சிகளும், சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்துார், பீர்க்கங்காரணை, திருநீர்மலை ஆகிய ஐந்து பேரூராட்சிகளும் இணைக்கப்பட்டு, தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.