பூரண தடுப்பூசி பெற்ற மேலும் சில வெளிநாட்டவர்களுக்காக அமெரிக்க எல்லைகள் திறப்பு

17.10.2021 02:55:11

பூரண தடுப்பூசிபெற்ற வெளிநாட்டவர்கள் அமெரிக்காவுக்கு பிரவேசிப்பதற்காக நவம்பர் 8 ஆம் திகதி முதல் தமது நாட்டு எல்லைகள் திறக்கப்படவுள்ளதாக நேற்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அதற்கமைய, அமெரிக்காவுக்குள் பிரவேசிப்பதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில், தொற்றல்லாதவராக உறுதிப்படுத்தப்படும் நபர்களுக்கு மாத்திரமே இதன்போது அனுமதி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவினால் கடந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் ஒரு அங்கமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப் புதிய தீர்மானத்துக்கமைய,  ஐரோப்பிய சங்கத்துக்கு உட்பட்ட 26 நாடுகள், ஐக்கிய இராச்சியம், பிரேசில், சீனா, இந்தியா, ஈரான், அயர்லாந்து மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்காவுக்கு பிரவேசிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படவுள்ளது.