உண்மைகளை மறைத்துள்ளார் சுரேஷ் சலே!

29.07.2026 12:00:00

முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உண்மைகள் எதனையும் மனுதாரரான சுரேஷ் சலே நீதிமன்றில் சமர்ப்பிக்காமல் மறைத்துள்ளார். பேராணை மனுவொன்றின் மூலம் நிவாரணம் பெற வேண்டுமாயின் அனைத்து உண்மைகளையும் நீதிமன்றில் வெளிப்படுத்த வேண்டும். அவர் தூய்மையான கரங்களுடன் நீதிமன்றத்திற்கு வரவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் ரிட் மனுவை சட்டத்தின் முன் எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல முடியும்?' என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், மன்றில் கேள்வியெழுப்பினார்.

    

 

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைதுசெய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு மேல்முறையீட்டு நீதிமன்றில் நேற்று மீண்டும் பரிசீலிக்கப்பட்டது.

மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹான்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் மன்றில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத்,

'கனம் நீதிபதி அவர்களே... உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு மனுதாரரான சுரேஷ் சலே எவ்வாறு இடையூறு விளைவித்தார் என்பது குறித்து, அன்றைய காலகட்டத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய பிரசாத் ரணசிங்க வழங்கிய வாக்குமூலத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 'சாரா ஜாஸ்மின்' என்ற பெண் உயிரிழக்கவில்லை என்றும், அவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்றும் பேச்சுக்கள் எழுந்தன. இது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சரியாக விசாரணை நடத்தவில்லை என சுரேஷ் சாலே விசாரணைப் மீளாய்வுக் கூட்டங்களில் குற்றஞ்சாட்டிப் பேசினார்.'

சாரா ஜாஸ்மின் அந்த இடத்திலேயே உயிரிழந்தார் என்றும், டிஎன்எ பரிசோதனைகள் சரியாக நடத்தப்படவில்லை என்றும் சுரேஷ் சலே பல சந்தர்ப்பங்களில் குற்றஞ்சாட்டியதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

டி.என்.எ பரிசோதனையை மீண்டும் நடத்த வேண்டும் என்பதே சுரேஷ் சலேவின் நிலைப்பாடாக இருந்ததுடன், அன்றைய ஜனாதிபதி மூலம் அந்தப் பணியை அவர் நிறைவேற்றிக் கொண்டார் என்பதும் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வாக்குமூலத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வாக்குமூலம் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 'பி' அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்,இதன் மூலம் மனுதாரர் விசாரணைகளில் தலையிட்டு இடையூறு ஏற்படுத்திய விதம் தெளிவாகப் புலப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மனுதாரரான சுரேஷ் சலே,2019 ஆம் ஆண்டு ஜனவரி 03 ஆம் திகதி பாதுகாப்புப் படிப்பிற்காக இந்தியா சென்றுவிட்டு அதே ஆண்டு டிசம்பர் மாதமே திரும்பியதாக நீதிமன்றில் தெரிவித்திருந்ததாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.

மலேசியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் கடமைகளை முடித்துத் திரும்பிய பின்னர் தனது இராஜதந்திரக் கடவுச்சீட்டை வெளியுறவு அமைச்சிடம் ஒப்படைத்துவிட்டதாக குற்றப்புலனாய்வுத் பிரிவிடம் சுரேஷ் சலே, கூறியிருந்த போதிலும், இந்த வழக்குடன் அந்த இராஜதந்திரக் கடவுச்சீட்டின் உண்மைப் பிரதியை நீதிமன்றில் அவர் சமர்ப்பித்துள்ளார். கடவுச்சீட்டை அமைச்சிடம் ஒப்படைத்திருந்தால் அதன் உண்மைப் பிரதியை எவ்வாறு நீதிமன்றில் சமர்ப்பிக்க முடியும் என அவர் கேள்வியெழுப்பினார்.

மேலும், 64 பக்கங்களைக் கொண்ட அந்த இராஜதந்திரக் கடவுச்சீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 17 அல்லது 18 பக்கங்கள் மட்டுமே நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ கடவுச்சீட்டின் 4 பக்கங்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன் 56 ஆவது பக்கத்தில் 2019 மே 18 ஆம் திகதியிட்ட இந்தியக் குடியுரிமை மற்றும் குடிவரவுப் பிரிவின் (வெளியேற்றம்) முத்திரையும், 2019 ஜூன் மாதத்தில் (உள்வருகை ) முத்திரையும் காணப்படுகின்றன. இந்தியா சென்ற பிறகு அங்கிருந்து வெளியேறவில்லை என சலே கூறிய போதிலும், அவர் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளார் என்பது இம்முத்திரைகள் மூலம் தெளிவாகிறது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு ஒரு மாதத்திற்கு அல்லது ஒன்றரை மாதத்திற்கு முன்னர், அன்றைய இராணுவத் தளபதியாக இருந்த மகேஷ் சேனநாயக்க தமக்கு தொலைபேசியில் அழைத்து, பிரிகேடியர் சுரேஷ் சலேவை சந்திக்க வேண்டும் எனத் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அசாத் மௌலானா அளித்த வாக்குமூலத்திலும் அக்காலப்பகுதியில் சுரேஷ் சலே இலங்கையிலேயே இருந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உண்மைகள் எதனையும் மனுதாரர் சுரேஷ் சலே நீதிமன்றில் சமர்ப்பிக்காமல் மறைத்துள்ளார். பேராணை மனுவொன்றின் மூலம் நிவாரணம் பெற வேண்டுமாயின் அனைத்து உண்மைகளையும் நீதிமன்றில் வெளிப்படுத்த வேண்டும். அவர் தூய்மையான கரங்களுடன் நீதிமன்றத்திற்கு வரவில்லை. இவ்வாறானதொரு மனுவை சட்டத்தின் முன் எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல முடியும்?' என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கேள்வியெழுப்பினார்.