அவுஸ்திரேலியாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை.

10.07.2025 08:10:40

அவுஸ்திரேலியாவிடமிருந்து அரிய கனிம வகைகளை பெற இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் செம்பு, யுரேனியம் போன்ற அரிய வகை கனிமங்கள் உள்ளன. அத்துடன்  சமாரியம், கடோலினியம், தெர்பியம், டைஸ்ப்ரோசியம், லுடேடியம் போன்ற கனிமங்களும் காணப்படுகின்றன. இவை எலக்ட்ரிக் மோட்டார், பிரேக்கிங் சிஸ்டம்ஸ், செல்போன்கள், ஏவுகணை தயாரித்தலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

எனவே, அவற்றை வெளிநாடுகளில் இறக்குமதி செய்து இந்தியா பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில்  அவுஸ்திரேலியாவில் கிடைக்கும் அரிய வகை கனிமங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக அவுஸ்திரேலியாவுடன்  இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆணையர் மாலினி தத் டெல்லியில் கூறியதாவது ”அவுஸ்திரேலியாவில் அதிக அளவில் செம்பு கனிமம் கிடைக்கிறன.. இந்த கனிமங்களைப் பெறுவதற்கு பல்வேறு நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

 

அதைப் போலவே செம்பு கனிமத்தை இறக்குமதி செய்வது தொடர்பாக அவுஸ்திரேலிய அதிகாரிகளுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக விரைவில் அவுஸ்திரேலியாவில் உள்ள சுரங்க நிறுவனங்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம்.

அவுஸ்திரேலியாவில் உள்ள செம்பு கனிமத்தைப் பெற இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. அவுஸ்திரேலியாவில் அதிக அளவில் செம்பு கனிமம் வெட்டி எடுக்கப்படுகிறன.  அதானி போன்ற நிறுவனங்கள் இத் துறையில் அதிக முதலீடு செய்துள்ளன. எனவே,அங்கிருந்து கனிமத்தைப் பெற பல நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் உள்ளன” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சீனாவில் கிடைத்து வரும் அரிய வகை கனிமங்களை ஏற்றுமதி செய்வதற்கு அந்நாடு அதிக அளவில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனவே, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து கனிமங்களைப் பெற இந்தியா முயற்சித்து வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.