ஐதேகவும், ஐக்கிய மக்கள் சக்தியும் இனி ஒரே சின்னத்தில் போட்டி!
|
தற்போதைய இடதுசாரி கொள்கையுடைய அரசாங்கத்திற்கு மாற்றாக, சர்வதேச அங்கீகாரமும் அனுபவமும் கொண்ட வலதுசாரி அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும். “எங்களை விடவும் சிறந்த ஒரு குழுவே அடுத்ததாக ஆட்சியைக் கைப்பற்றும்" என ஜனாதிபதி அடிக்கடி குறிப்பிடுவது, மறைமுகமாக ஐக்கிய மக்கள் சக்தியை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்தார். |
|
கொழும்பில் உள்ள தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். எதிர்வரும் காலங்களில் மாகாண சபை அல்லது பாராளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டும் நிச்சயமாக ஒரே சின்னத்தின் கீழ் இணைந்து போட்டியிடவுள்ளன. தற்போதைய இடதுசாரி அரசாங்கத்தை வீழ்த்துவதையும், வெறும் அரசியல் வெற்றிக்காக மட்டுமன்றி, நாட்டின் எதிர்காலத்தை மாற்றி அமைப்பதையும் இக்கூட்டணி முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. எதிர்வரும் தேர்தலில் 1.23 மில்லியன் புதிய வாக்காளர்களாக உருவெடுக்கும் ஜென்-ஸீ தலைமுறையினரும், முன்னர் இவ்விரு கட்சிகளும் தனித்துச் செயல்பட்டதால் வாக்களிக்கச் செல்லாதிருந்த சுமார் 1.5 மில்லியன் வாக்காளர்களும் இக்கூட்டணியின் பக்கம் அணி திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வெறுமனே விமர்சனங்களை மட்டும் முன்வைக்காமல், இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய நாட்டை உருவாக்குவதே தற்போதைய தேவையாகும். தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் முதன்மை மூலக்காரணம் டொலர் பற்றாக்குறையாகும். வெளிநாட்டு முதலீடுகள் வருகை தராமை, ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளமை மற்றும் சுற்றுலாத் துறை நலிவடைந்துள்ளமை போன்ற சவால்களுக்குத் தீர்வாக, புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட முதல் ஆண்டிலேயே உலக நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி குறைந்தது 10 பில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் நாட்டின் டொலர் கையிருப்பு வலுப்படுத்தப்பட்டு, உழைக்கும் போது செலுத்தும் வரி 11 சதவீதம் முதல் 15 சதவீதம் வரம்பிற்குள் குறைக்கப்பட்டு, எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்கள் கணிசமாகக் குறைக்கப்பட வேண்டும். தற்போதைய இடதுசாரி ஆட்சிக்கு மாற்றாக, சர்வதேச ரீதியில் தொடர்புகளைப் பேணக்கூடிய மற்றும் அனுபவமிக்க ஒரு வலதுசாரி அரசாங்கத்தை அமைப்பதே இக்கூட்டணியின் முக்கிய நோக்கமாகும். மக்கள் தமக்குத் தேவையான புதிய மாற்று வழியைத் தேடும் வேளையில், அனுபவமும் சர்வதேச அங்கீகாரமும் கொண்ட, ஊழல் குற்றச்சாட்டுகள் அற்ற தூய்மையான ஒரு குழுவே அவசியமாகிறது. "எங்களை விடவும் சிறந்த ஒரு குழுவே அடுத்ததாக ஆட்சியைக் கைப்பற்றும்" என ஜனாதிபதி அடிக்கடி குறிப்பிடுவது, மறைமுகமாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் கூட்டணிக் குழுவையே குறிப்பதாகும்.அரசுச் செய்திகள் இதேவேளை, தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலும் பெருமளவிலான இரகசிய அரசியல் ஒப்பந்தங்கள் இடம்பெற்று வருகிறது. ஊழல்வாதிகளைக் கைது செய்வதாகக் கூறிக்கொண்டு, பழைய சிறிய சம்பவங்களைப் பின்தொடர்வதும், ஊழல் ஒழிப்பு என்ற போர்வையில் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசாங்கம் ஊழல்வாதிகளைக் கைது செய்வதை எதிர்க்கவில்லை, ஆனால் எதிர்க்கட்சியினர் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு எதிரான அரசியல் அடக்கு முறைகளையும் பழிவாங்கல்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். |