அரசாங்கம் இராணு வீரர்களை பரிதவிக்கச் செய்கின்றது!
மக்களுக்கு பெற்றுக் கொடுத்த நம்பிக்கைகளைக் காப்பாற்ற முடியாமல் அரசு திணறும் நிலையில், பல தரப்பினரின் பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வளமான நாடு, அழகான வாழ்க்கையை உருவாக்கித் தருவோம் என கூறிய தற்போதைய அரசாங்கம், இன்று வெறும் வாய்ச்சொல்லுக்கு மாத்திரம் சுருங்கி, இலட்சக்கணக்கான மக்களுக்கு பெற்றுக் கொடுத்த நம்பிக்கைகளைக் காப்பாற்ற முடியாமல் திணறுகின்றது என்றும் கூறினார்.
மாத்தறை பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தோடு கொடுக்கல் வாங்கள்களில் ஈடுபட்ட 13,000 இன்று நிர்க்கதியில்!
தற்சமயம் மாத்தறை பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான 14 கிராமிய வங்கி கிளைகளில் 13,000 வைப்பாளர்கள் காணப்படுகின்றனர். 2026 ஏப்ரல் மாதம் வரை இந்த 14 கிராமிய வங்கிகளின் கொடுக்கல்வாங்கல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும், தற்சமயம் வைப்பாளர்களால் தமது பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பல வருடங்களாக கணக்காய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்காமையினால் ஏற்பட்ட பிரச்சினை குறித்து இப்போது வெளித்தெரிவிக்கப்பட்டாலும், 2026 ஏப்ரல் வரை குறித்த கொடுக்கல்வாங்கல்கள் இடம்பெற்றுள்ளன.
தென் மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரின் பொறுப்பு இந்த வைப்பாளர்களின் பண நிர்வாகத்தை மேற்பார்வை செய்வதாக காணப்பட்டாலும், அவர் இந்த வைப்பாளர்களிடம் வழங்கியுள்ள பதிலானது பொலிஸாரை நாடுமாறு கூறியுள்ளமையாகும். இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இதற்கு அரசியல் அழுத்தங்கள் காரணமாக வைப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு நிலவுவதால், அவர்களுக்கு உரிய நியாயத்தை பெற்றுக் கொடுக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சமுர்த்தி வங்கி கணினி உதவியாளர்களின் தொழில்களை மீள பெற்றுக் கொடுங்கள்.
வளமான நாடு, அழகான வாழ்க்கையை உருவாக்கித் தருவோம் என தெரிவித்தாலும், சமுர்த்தி கட்டமைப்புக்குள் சமூக மூலதன வங்கிகளுக்காக உள்ளீர்க்கப்பட்ட 250 கணினி உதவியாளர்கள் இன்று வீதியில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறும் இந்த அரசாங்கம், 2021 ஆம் ஆண்டு தொழில் நியாய சபை மன்றம் வழங்கிய தீர்ப்பான, இந்த 250 பேரையும் மீண்டும் சேவையில் அமர்த்த வேண்டும் என்ற தீர்ப்பினை தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதாக இல்லை.
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகப் போராட்ட முழக்கங்களை எழுப்பிப் பேரணிகளில் கலந்து கொண்டு தொழிலாளர் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த இந்த அரசாங்கம், இன்று இந்தக் சமுர்த்தி வங்கி கணினி உதவியாளர்களை வெளியில் தள்ளியுள்ளது. இப்போதாவது இவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இராணு வீரர்களையும் பரிதவிக்கச் செய்கின்றது இந்த அரசாங்கம்!
நமது நாட்டின் இராணுவ வீரர்கள் சமூகத்தின் பெருமளவானோர் இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்குப் பக்க பலத்தைப் பெற்றுத் தந்தனர்.
நமது நாட்டுக்காகத் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த இராணுவ வீரர்கள் தற்சமயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு 1982-07-28 திகதியிட்ட அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய இவர்களுக்கு 55 வயது வரை ஊதியமும் கொடுப்பனவுகளும் கிடைக்கப்பெறுகின்றன.
2014 ஆம் ஆண்டின் சுற்றறிக்கையில் பல சிக்கல்கள் காணப்பட்டதுடன், அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களை 2 பிரிவுகளாகவும் பிரித்தது.
நல்லாட்சி அரசாங்கம் 22 வருட சேவையின் பின்னர், சேவையிலிருந்து ஓய்வுபெற்ற மற்றும் அங்கவீனமுற்ற பலவீனமான 20%க்கு மேற்பட்ட இராணுவ வீரர்களுக்குச் சம்பளக் கொடுப்பனவு அதிகரிப்புக்களை வழங்கிய போதிலும், 2014-03-01 திகதியிட்ட மேலதிக செயலாளர் ஒருவர் உருவாக்கிய சுற்றறிக்கை காரணமாக இத்திகதிக்கு முன்னர் மருத்துவ சபையினால் வழங்கப்பட்டவர்களுக்கு இந்தச் சலுகைகள் வழங்கப்பட்டாலும், அதன்பிறகு உள்ளவர்களுக்கு இந்த எந்தவொரு சம்பள அதிகரிப்புக் கொடுப்பனவுகளும் கிடைக்கப்பெறுவதில்லை.
இதனால் 500 இராணுவ வீரர்களுக்கு இவ்வாறு இவை பெற்றுக் கொடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் இந்தச் சம்பளச் சலுகைகள், கொடுப்பனவுகள் போன்றவற்றை பெற்றுத் தருவோம் என பிரஸ்தாபித்தாலும், இந்த அரசாங்கமும் அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கை என்பது ஒரு கனவாக மாறி, இலட்சக்கணக்கான மக்கள் பெற்றுத் தந்த ஆணையை அரசாங்கம் மீறிவிட்டது. இப்போதாவது மக்களுக்கு பெற்றுக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.