ஒரு வருடமாகியும் அடையாளம் காண நடவடிக்கை இல்லை!

18.06.2026 15:35:59

செம்மணி மனித புதைகுழியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்படும் என்புத் தொகுதிகள், நிபுணத்துவம் வாய்ந்த பிரபலமான பல்கலைக்கழகங்களுக்கு அல்லது பரிசோதனைக்கூடங்களுக்கு அனுப்பப்பட வேண்டும் எனக் கூறி ஒரு வருடமாகின்ற போதும் அவை இன்னமும் அனுப்பப்படவில்லை. அகழ்ந்தெடுக்கப்படும் என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, இதற்குக் காரணமானவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

    

 

செம்மணி மனித புதைகுழி தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

செம்மணியில் நேற்று (17) உடன் அதிக எண்ணிக்கையிலான என்புத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனிதப் புதைகுழியாக செம்மணி மனிதப் புதைகுழி உருவெடுத்துள்ளது. இதற்கு முன்னர் மன்னார் மாவட்டத்தில் உள்ள சதோசா மனித புதைகுழியில் 376 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தன.

தற்போது அகழ்ந்தெடுக்கப்படும் என்புத் தொகுதிகளையும் அதிகூடிய நிபுணத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் அல்லது பரிசோதனைக்கூடங்களில் ஆராயப்பட வேண்டும் என நாங்கள் கோரியிருந்தோம். அதற்கான உத்தரவுகளையும் நீதிமன்றம் வழங்கியிருந்தது.

என்புத் தொகுதிகளை அகழ்ந்தெடுப்பது என்பது ஓர் ஆரம்பகட்ட விடயம். ஆனால், அதைவிடப் பிரதானமானது அகழ்ந்தெடுக்கப்படும் என்புத் தொகுதிகள் யாருடையது என்பதை அடையாளம் காண்பது. என்புத் தொகுதிகளை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் இன்னமும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.