காந்தஹார் விமான நிலையத்தில் தலிபான்கள் 'ராக்கெட்' தாக்குதல்

02.08.2021 09:36:28

ஆப்கானிஸ்தானின் காந்தஹார் விமான நிலையம் மீது தலிபான் பயங்கரவாதிகள் 'ராக்கெட்'டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.


இதையடுத்து அங்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற துவங்கியதால், தலிபான் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன.முதற்கட்டமாக கிராம பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தபயங்கரவாதிகள், அடுத்ததாக நகரங்களை நோக்கி முன்னேற துவங்கி உள்ளனர்.

நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான காந்தஹாரை கைப்பற்ற முடிவு செய்து அதன் புறநகர் பகுதிகளில் சில வாரங்களாக தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.சீரமைப்பு பணிஇதற்கிடையே காந்தஹார் விமான நிலையம் மீது நேற்று முன்தினம் இரவு தலிபான்கள் மூன்று ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர். அவற்றில் இரண்டு ராக்கெட்டுகள் விமான ஓடுதளங்களை நாசமாக்கின. ராக்கெட் தாக்குதலால் சேதமடைந்த ஓடுதளத்தில் சீரமைப்பு பணிகள் துவங்கி உள்ளதால், அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக காந்தஹார் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.