அநுர தரப்புக்கு உலக நாடுகள் வாழ்த்து
நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு உலக நாடுகள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றன.
நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சக ஜனநாயக நாடாக இந்தியா, இந்த மக்கள் ஆணையினை வரவேற்பதாகவும், மக்களின் நலன்களுக்காக இருதரப்பு உறவினை மேலும் வலுவாக்க உறுதி கொண்டுள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்பை முன்னேற்றுவதற்கும் இலங்கையின் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் உத்தியோகப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்த விடயம் பகிரப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக இலங்கையிலுள்ள ஜப்பானியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையுடனான ஆழமான நம்பிக்கை மற்றும் நட்பைத் தொடர்ந்து முன்கொண்டு செல்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜப்பானியத் தூதுவர் அக்கியோ இசோமாடா தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஜனாதிபதியின் தலைமைத்துவம் மற்றும் அவரது தொலைநோக்கு பார்வை என்பவற்றின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை இந்த தேர்தலினூடாக வெளிப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் பிரதமர் செஷபாஸ் செரீஃப் தெரிவித்துள்ளார்.
தமது எக்ஸ் பக்கத்தில் அவர் தமது வாழ்த்துக்களைப் பதிவிட்டுள்ளார்.
இதன்படி, இலங்கையுடனான தங்களது நெருக்கமான நீண்டகால உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்குப் பாகிஸ்தான் உறுதியாகவுள்ளதாக அந்த நாட்டுப் பிரதமர் தெரிவித்துள்ளார்.