
இந்த ஜனாதிபதி இந்தியாவுக்கு அடிபணிந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை காட்டிலும் இந்த ஜனாதிபதி இந்தியாவுக்கு அடிபணிந்துள்ளது. இலங்கை மக்களின் தனிப்பட்ட தரவு கட்டமைப்பை இந்தியாவுக்கு தாரைவார்க்கும் அரசாங்கத்தின் முறைகேடான செயற்பாட்டை நாட்டு மக்கள் அனைவரும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். |
கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கையில் தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்காக 2021 ஆம் ஆண்டு இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.இருப்பினும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உள்ளடங்கள் செயற்படுத்தப்படவில்லை. இதன்பின்னர் 2023 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டையை உருவாக்குவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் தேசிய ஆட்பதிவு திணைக்களத்துக்கு 3 பில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் பிரிவுகளின் நிர்வாக கட்டமைப்பு முறைமையை மாற்றியமைப்பற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்குரிய நவீன தொழில்நுட்ப சாதனங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. ஆட்பதிவு திணைக்களம் டிஜிட்டல் ஆளடையாள அட்டைக்கான ஆரம்பக்கட்ட பணிகளை மேற்கொண்டு, அப்பணிகள் 99 சதவீதமளவில் நிறைவு செய்துள்ளன. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் டிஜிட்டல் ஆளடையாள அட்டையை செயற்பாட்டு ரீதியில் செயற்படுத்த ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்திருந்தது. இந்திய கொள்கையுடன் செயற்பட்ட இந்த அரசாங்கம் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்க வேண்டும்,இந்தியாவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தேசிய ஆட்பதிவுத் திணைக்களத்துக்கு கடும் அழுத்தம் பிரயோகித்துள்ளது. டிஜிட்டல் முறைமையிலான தேசிய அடையாள அட்டை விநியோகத்துக்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் மாதம் பிரசுரிக்கவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ள நிலையில் தான் இந்த திட்டத்தை இந்தியாவுக்கு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இலங்கையில் தனிப்பட்ட தரவு சேகரித்தல் மற்றும் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்துக்கான விலைமனுகோரல் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.இந்த விலைமனுகோரல் இலங்கையில் பிரசுரிக்கப்படவில்லை. இந்தியாவில் தான் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த விலைமனுகோரல் பத்திரத்தில் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறித்த தனிப்பட்ட தரவுகள் மூன்றாம் தரப்புக்கு கசிந்தால் இந்திய நிறுவனம் 10 சதவீதமளவில் தான் பொறுப்புக்கூறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலகில் தற்போது தரவு திருட்டு பிரதான மோசடியாக காணப்படுகிறது. ஆட்பதிவுத் திணைக்களம் சுமார் 5 பில்லியன் ரூபாய் வரையில் செலவு செய்து டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை நிறைவு செய்துள்ள நிலையில், அந்த முறைமையை புறக்கணித்து விட்டு முழு திட்டத்தையும் இந்தியாவுக்கு வழங்குவது முற்றிலும் முறையற்றது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை காட்டிலும் இந்த ஜனாதிபதி இந்தியாவுக்கு அடிபணிந்துள்ளது. இலங்கை மக்களின் தனிப்பட்ட தரவு கட்டமைப்பை இந்தியாவுக்கு தாரைவார்க்கும் அரசாங்கத்தின் முறைகேடான செயற்பாட்டை நாட்டு மக்கள் அனைவரும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றார். |