அனுரகுமார, அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

26.04.2026 14:33:29

அரசாங்கத்தின் இரு முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. இதன்படி, நிதி அமைச்சராகப் பணியாற்றி வரும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர ஆகிய இருவருமே இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு முகங்கொடுக்கவுள்ளனர்.

அடுத்த பாராளுமன்ற அமர்வு மே மாதம் 5 ஆம் திகதி ஆர்பிக்கப்பட உள்ள நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரச திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் நிதி, போலியான வெளிநாட்டு வங்கிக் கணக்கு ஒன்றிற்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் பாரிய நிதி முறைகேடு தொடர்பாக நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.

இதேவேளை ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர, கிழக்கு கட்டளைப் பிரிவின் தளபதியாகக் கடமையாற்றியிருந்தார். எனினும், அத்தாக்குதல்களைத் தடுப்பதற்கு அவர் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது.

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி திருடப்பட்டமை குறித்து அரசாங்கம் இதுவரை முறையான அறிக்கை எதனையும் வெளியிடவில்லை. நிதி அமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும ஒரு கருத்தைக் கூறுகிறார், நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த மற்றொரு கருத்தை முன்வைக்கிறார்.

இதனால் மக்கள் உண்மையான தகவலைப் பெற்றுக்கொள்ள முடியாமல் குழப்பமடைந்துள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது. இந்த மோசடி குறித்து துல்லியமான மற்றும் உண்மையான தகவல்களைப் பெறுவதற்கு நாட்டு மக்களுக்கு உரிமை உள்ளது. மறுபுறம் 2.5 மில்லியன் டொலர் விவகாரம் ஜனவரி மாதமே கண்டறியப்பட்டதாகவும், பல மாதங்களாக இரகசியமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் நிதி அமைச்சின் செயலாளர் கூறுகிறார்.

அவ்வாறாயின், ஜனவரியில் கண்டறியப்பட்ட பிரச்சினைக்கு விசாரணைக் குழுவை அமைப்பதற்கு மார்ச் மாதம் வரை ஏன் தாமதம் ஏற்பட்டது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

நாட்டின் நிதி நிலைமை குறித்து முழுப் பொறுப்புடைய பாராளுமன்றத்திற்கு, இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்த தகவல் வெளியாகும் வரை அது பற்றி அறிவிக்கப்படாமல் இருந்தமை ஒரு பெரும் பிரச்சினையாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே 2.5 மில்லியன் டொலர் விவகாரம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆகிய இரண்டையும் மையப்படுத்திய நம்பிக்கையில்லாத் தீர்மானங்களில் அடுத்த வாரம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிடத் திட்டமிட்டுள்ளனர். இந்த நகர்வு தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.