பொன்சேகா - அறைகூவல் !

09.08.2022 09:33:49

 

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க சிறிலங்கா இராணுவ தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான பாரிய போராட்டத்திற்கு, முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பரபரப்பாக காணப்படும் தென்னிலங்கை

இன்று பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமையால் கொழும்பு நகரம் பரபரப்பாக காணப்படுகிறது.

இந்நிலையிலேயே அக்குரேகொடவில் உள்ள இராணுவ தலைமையகத்திற்கு ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்துள்ளார்.

அதிபராக பதவியேற்றதும் இராணுவ தலைமையகத்திற்கு சென்ற ரணில் விக்ரமசிங்க முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

மாபெரும் போராட்டத்திற்கு அறைகூவல்

அண்மையில் காலிமுகத்திடலில் திடீரென புகுந்த படையினர் அங்கிருந்தவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதுடன், பெரும் வன்முறையும் வெடித்திருந்தது.

 

இவ்வாறான பின்னணியிலேயே இன்று 9 ஆம் திகதி மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு சரத் பொன்சேகா அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

அத்துடன் போராட்டக்காரர்கள் உயிர்த் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்திருந்தார். இவ்வாறான நிலையில், கடந்த சில நாட்களாக போராட்டத்தின் முக்கிய பிரமுகர்களை கைது செய்யும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.