இலங்கையை அரித்துத் தின்னும் அரசியல்!

03.12.2025 14:43:03

இலங்கைத் தீவு இன்று இயற்கை அனர்த்தத்தாலும், பொருளாதாரச் சிதைவாலும் நிலைகுலைந்து போயிருக்கிறது. இன்று ஆட்சியில் அனுர குமார திஸாநாயக்க அமர்ந்திருந்தாலும், நாடு இந்த மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதற்கான வேர்கள் மிக ஆழமானவை. அந்த வேர்களைத் தேடிச் சென்றால், அது "மாமா ஜே.ஆர் - மருமகன் ரணில்" எனும் மையப்புள்ளியிலும், அவர்களுக்குக் காலங்காலமாக முண்டுகொடுத்த "தமிழரசுக்கட்சியின் சந்தர்ப்பவாதத்திலும்" வந்து நிற்கிறது. இயற்கை அனர்த்தம் ஒருபுறம் மக்களைக் கொன்று கொண்டிருக்க, இந்த இக்கட்டான நேரத்திலும் தங்கள் அரசியல் இருப்பை மட்டுமே யோசிக்கும் 'பொறுக்கித்தனம்' மிக்க அரசியலைத் தோலுரிக்கும் கட்டுரை இது.

1. ஜே.ஆர்: சர்வாதிகாரத்தின் பிதாமகன்

இலங்கையின் இனப்பிரச்சினை இனப்படுகொலையாக மடைமாற்றப்பட் டதற்கும் , பொருளாதாரச் சீரழிவுக்கும் முதல் விதை எங்கே தூவப்பட்டது என்று தேடிப் பார்த்தால், அது 1977-ல் ஜே.ஆர். ஜெயவர்தனவின் வருகையோடு நிற்கிறது.

சர்வவல்லமை பொருந்திய ஜனாதிபதி முறை: "ஆணை பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர வேறெதையும் செய்ய முடியும்" என்று ஆணவத்தோடு கூறப்பட்ட 1978-ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் தான் இலங்கையின் ஜனநாயகத்தைச் சிறைப்பிடித்தது. பௌத்த சிங்கள பேரினவா வன்முறைக்கும் , அதிகார துஷ்பிரயோகத்திற்கும் வழிவகுத்தது.

திறந்த பொருளாதாரத்தின் மறுபக்கம்: உள்ளூர் உற்பத்தியை அழித்து, இறக்குமதியை ஊக்குவிக்கும் கலாச்சாரத்தை ஜே.ஆர் அறிமுகப்படுத்தினார். இது மேல்தட்டு வர்க்கத்தை மேலும் பணக்காரர்களாக்கியதே தவிர, அடித்தட்டு மக்களைக் கடனாளிகளாக்கியது.

இனக்கலவரத்தின் சூத்திரதாரி: 1977 மற்றும் 1983 கறுப்பு ஜூலை கலவரத்தை வேடிக்கை பார்த்தது மட்டுமல்லாமல், "போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்" என்று கூறி நாட்டை இரத்த வெள்ளத்தில் மிதக்க விட்டவர் ஜே.ஆர். அந்த வடு இன்றும் ஆறவில்லை.

2. ரணில்: நரியின் தந்திரமும், நாட்டின் வீழ்ச்சியும்

மாமா ஜே.ஆர் போட்ட சர்வாதிகாரப் பாதையில், 'ஜனநாயகவாதி' வேடமிட்டுப் பயணித்தவர் ரணில் விக்கிரமசிங்க. இன்று அவர் அதிகாரத்தில் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நாடு இருக்கும் நிலைக்கு அவரே பிரதான சிற்பி.

பொருளாதாரச் சரிவு: மத்திய வங்கி பிணைமுறி மோசடி முதல், கண்மூடித்தனமான கடன் வாங்கும் கலாச்சாரம்வரை ரணில் விதைத்த வினைகளையே நாடு இன்று அறுவடை செய்கிறது.

ராஜபக்சக்களின் கவச குண்டலம்: மக்கள் போராடி ராஜபக்சக்களை விரட்டியபோது, அவர்களைப் பாதுகாக்க ஓடிவந்து அதிகாரத்தைக் கைப்பற்றியவர் ரணில். சட்டத்தின் பிடியிலிருந்து அவர்களைத் தப்பவைத்து, ஜனநாயகப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர். இப்போதும் கூட, அனர்த்தத்தைப் பற்றிக் கவலைப்படாமல், அடுத்த தேர்தலில் எப்படித் தலையை நீட்டலாம் என்றே கணக்குப் போடுகிறார்.

3. தமிழரசுக்கட்சி: முதுகில் குத்திய 'திரைமறைவு' அரசியல்

இந்த வரலாற்றில் மன்னிக்க முடியாத மற்றொரு துரோகம், தமிழர்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் தமிழரசுக்கட்சியினுடையது (ITAK).

ரணிலின் 'ஆபத்பாந்தவர்கள்': எப்போதெல்லாம் ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக்கு ஆபத்து வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழர்களின் உரிமைகளைப் பற்றிப் பேசாமல், ரணிலைக் காப்பாற்ற ஓடோடிச் சென்று முண்டுகொடுத்தது தமிழரசுக்கட்சி.

எதிர்க்கட்சித் தலைவர் நாடகம்: சம்பந்தன் ஐயா எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்தில், ஆளுங்கட்சிக்குச் சாமரம் வீசினார்களே தவிர, தமிழ் மக்களுக்கான தீர்வையோ, அல்லது காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியையோ பெற்றுத்தரவில்லை.

திரைமறைவு டீலிங்: "நாங்கள் ரணிலோடு பேசிக்கொண்டிருக்கிறோம், தீர்வு வரும்" என்று மக்களிடம் பொய் சொல்லிவிட்டு, கொழும்பில் சொகுசு பங்களாக்களுக்கும், வாகன பர்மிட்டுகளுக்கும் ரணிலுடன் 'டீல்' பேசிய வரலாறே இவர்களுக்கு அதிகம்.

4. அனுரவின் ஆட்சியும், மாறாத துயரமும்

இன்று அனுர குமார திஸாநாயக்க ஆட்சியில் இருக்கலாம். ஆனால், ஜே.ஆர் உருவாக்கிய அரசியலமைப்பும், ரணில் சிதைத்த பொருளாதாரமும், தமிழரசுக்கட்சி போன்றவர்களின் இரட்டைவேட அரசியலும் உருவாக்கிய புதைகுழி மிகவும் ஆழமானது.

வெள்ளம் வந்தால் மக்கள் தெருவில் நிற்பதும், அரசியல்வாதிகள் ஆடம்பர விடுதிகளில் கூடடம் போட்டுத் தங்களை மக்கள் சேவகர்களாகக் காட்டிக்கொள்வதும் வாடிக்கையாகிவிட்டது. இயற்கைப் பேரிடர் காலத்தில் கூட, பாதிக்கப்பட்ட மக்களைப் பகடைக்காய்களாக்கி அரசியல் செய்யும் ஈனப்புத்தி இன்னும் மாறவில்லை.

இலங்கை நாசமானது இயற்கையால் மட்டுமல்ல; ஜே.ஆரின் சர்வாதிகாரம், ரணிலின் சூழ்ச்சி, தமிழரசுக்கட்சியின் துரோகம் ஆகிய மூன்றும் இணைந்த முக்கோணக் கூட்டணியால்தான்.

இன்று ரணில் ஆட்சியில் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர் உருவாக்கிய 'டீல் அரசியல்' கலாச்சாரம் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறது. இந்த வரலாற்றைத் தெரிந்து கொள்ளாமல், இலங்கையின் எதிர்காலத்தைச் சிந்திப்பது அறிவீனம்.