கல்வி தொடர்பில் கோபா குழுவில் செலுத்தப்பட்ட கவனம்

18.07.2023 06:34:54

கல்வி தொடர்பில் கோபா குழுவில் செலுத்தப்பட்ட கவனம்இலங்கையில் கல்வித்துறையில் அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய தரவு அமைப்பை பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.


அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் 20 ஆம் திகதி கல்வி அமைச்சு கோபா குழுவிற்கு அழைக்கப்பட்ட போது, இலங்கையின் கல்வித் துறை தொடர்பான தரவுகளைப் பராமரிக்கும் கல்வி முகாமைத்துவ தரவுக் கட்டமைப்பு (NEMIS) பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், இந்தத் தரவுக் கட்டமைப்பில் போதுமான புதுப்பிக்கப்பட்ட தரவுகள் இல்லை என்பது இதன்போது தெரியவந்தது.

இதன் காரணமாக கல்வித்துறையில் உள்ள சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் இந்தத் தரவுக் கட்டமைப்புடன் சம்பந்தட்ட அனைத்து தரப்பினரையும் தொடர்புபடுத்தி இது தொடர்பில் கலந்துரையாட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய கடந்த (07) ஆம் திகதி கோபா குழு கூடி இது தொடர்பான அனைத்துத் தரப்பினரையும் தொடர்புபடுத்தி விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பாடசாலைகள், ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ள பாடசாலைகள், மாணவர்கள் பற்றிய தகவல்கள், ஆசிரியர் வெற்றிடங்கள் பற்றிய தரவுகள் போன்றவற்றை கல்வி அமைச்சு சரியாகப் பராமரிக்க வேண்டும் என கோபா குழுவின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார். இதில், பல மாகாணங்களின் கல்வி நிர்வாக அதிகாரிகளும் Zoom தொழில்நுட்பம் மூலம் இணைந்துகொண்டனர். அதற்கமைய, இந்த அதிகாரிகள் அனைவரிடமும் தற்போதுள்ள தரவுக் கட்டமைப்பு தரவுகளை பதிவுசெய்தல் மற்றும் அதில் காணப்படும் சிரமங்கள் குறித்து வினவப்பட்டது.

அத்துடன், சப்ரகமுவ மாகாணத்தின் ஒரு சில அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டு மாகாணத்தில் பராமரிக்கப்படும் தரவு அமைப்பு மற்றும் அந்த அதிகாரிகள் இங்கு அழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்தத் தரவு அமைப்பில் சாதகமான அம்சங்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய கோபா குழு, இதனை விருத்தி செய்து தேசிய அளவில் பராமரிக்க முடியுமா என்பதைப் பரிசீலித்து அது தொடர்பில் உதவுமாறு இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத்துக்கு ஆலோசனை வழங்கியது.

அதற்கமைய, ஒரு வாரத்துக்குள் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் சந்தித்துக் கலந்துரையாடி, தரவு அமைப்பிலுள்ள குறைபாடுகளைச் சீர்செய்யும் முறை தொடர்பில் அறிக்கை ஒன்றை வழங்குமாறு கோபா குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண ஆலோசனை வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, பிரசன்ன ரணவீர, (கலாநிதி) சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான விமலவீர திசாநாயக்க, அசோக் அபேசிங்க, வீரசுமன வீரசிங்க, (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட மற்றும் மஞ்சுளா திசாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.