டோனியை தொடர்ந்து CSK அணி தக்கவைக்கும் நட்சத்திர வீரர்

23.11.2021 11:13:23

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டுவைன் பிராவோ பங்கேற்பது குறித்து சிஎஸ்கே நிர்வாகம் வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

அடுத்தாண்டு ஐபிஎல் தொடர் முதல் 2 புதிய அணிகள் சேர்க்கப்படவுள்ளதோடு மெகா ஏலமும் நடைபெறவுள்ளது. ஏலத்தின் போது ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்கவைப்போகிறது, எவ்வளவு சம்பளத்தொகை கொடுக்கப்போகிறது என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

ஒவ்வொரு அணியின் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம். அதில் குறைந்தபட்சம் ஒரு அயல்நாட்டு வீரரும், அதிகபட்சமாக 3 இந்திய வீரர்களும் இடம் பெற வேண்டும் என பிசிசிஐ தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் டோனியை முதல் வீரராக தக்கவைக்கப்போவதாக சிஎஸ்கே அணி பகிரங்கமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் டுவைன் பிராவோவும் தக்கவைக்கப்படலாம் எனத் தகவல் கசிந்துள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டுவைன் பிராவோ, ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா என்பதில் குழப்பம் நீடித்தது. ஆனால் நிச்சயம் அவர் இருப்பார் என சிஎஸ்கே செயல் தலைவர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், டுவைன் பிராவோ நிச்சயம் 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மட்டும் தான் ஓய்வு பெற்றுள்ளார்.

இன்னமும் அவர் முழு உடற்தகுதியுடனும், அதே திறமையுடனும் தான் இருக்கிறார் எனக் காசி விஸ்வநாதன் தெரிவித்தார். அடுத்த வாரத்திற்குள் இது தொடர்பாக நீங்கள் அறிவீரர்கள் என கூறினார்.

இதன்மூலம் சிஎஸ்கே தக்கவைக்கப்போகும் ஒரே ஒரு அயல்நாட்டு வீரராக பிராவோ இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.