குழந்தைகளுக்கான கோவிட் தடுப்பூசி; அடுத்த மாதம் இறுதியில் விற்பனை

14.09.2021 10:59:22

அமெரிக்காவில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான கோவிட் தடுப்பூசி அடுத்த மாத இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அமெரிக்கா வில் கொரோனாவால் நான்கு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்; 6.60 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த முறை, கொரோனா பாதிப்பால் அதிக அளவிலான குழந்தைகள் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். குழந்தைகளுக்கு கொரோனா அறிகுறி இல்லாத பாதிப்பு அதிகம் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கழகத்தின் முன்னாள் ஆணையரும், 'பைசர்' நிறுவன இயக்குனர் குழு உறுப்பினருமான டாக்டர் ஸ்காட் கோட்டியப் கூறியதாவது:எங்கள் நிறுவனம் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை தயாரித்துஉள்ளது. இதற்கான சோதனை இறுதிக் கட்டத்தில் உள்ளது. அக்., இறுதியில் இந்த தடுப்பூசிக்கு அரசு அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து தடுப்பூசி விற்பனை துவங்கும். குழந்தைகளுக்கான தடுப்பூசி என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார். இதேபோல மாடர்னா நிறுவனமும் குழந்தைகளுக்கான தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தின் தடுப்பூசிக்கும் விரைவில் அரசு ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.