அரசியலமைப்பிலுள்ள ஓட்டைகளைத் தேடும் நபராக ஜனாதிபதி மாறியுள்ளார்!

09.07.2024 08:08:17

“அரசியலமைப்பில் உள்ள ஓட்டைகளைத் தேடும் நபராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாறியுள்ளார்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நேற்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்ட   மக்கள் அரண் வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தற்போதைய ஜனாதிபதியினாலோ அல்லது அவரது சகாக்களினாலோ நாட்டைக் கட்டியெழுப்பவோ அபிவிருத்தி செய்யவோ முடியாது. நாட்டில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான விருப்பமும் அவர்களிடம் இல்லை.

ஜனாதிபதி ரணிலுக்கு  சாதாரண மக்கள் மீது எந்த உணர்வும் இல்லை. தன்னை ஆட்சிக்கு கொண்டு வந்த நாட்டை அழித்த திருடர்கள் கூட்டத்தை பாதுகாப்பதே தனது ஒரே நோக்கமாக கொண்டு செயற்பட்டு வருகின்றார்.

தற்போதைய அரசாங்கம் தோல்வியைத் தழுவும் என்றே சமீபத்தைய சகல கண்கானிப்பு அறிக்கைகளும் சொல்கின்றன.  ஜனாதிபதி தேர்தல் மூலம் மீண்டும் இவர்களால் அதிகாரத்துக்கு வர முடியாது.

வரலாற்றில் முதன்முறையாக இடதுசாரி சக்திகளும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளன.  இம்முறை இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி பேதமின்றி ஐக்கிய மக்கள் சக்தி வரலாற்று சிறப்பு மிக்க மக்கள் ஆணையைப் பெற்றுக் கொள்ளும்.

இவர்கள் நமது நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக இருப்பதோடு, நாட்டின் வளர்ச்சிக்கு எதிராகவும் செயற்பட்டு வருகின்றனர்.

எனவே ஊழல் தரப்புடன் இணைந்து ஜனாதிபதி முன்னெடுத்து வரும் இந்த சதியை மக்கள் பலத்தால் தோற்கடிப்போம்” இவ்வாறு  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.