பெண் ஊழியர்களுக்கு நியூயார்க் கவர்னர் பாலியல் துன்புறுத்தல்

04.08.2021 11:11:18

'அமெரிக்காவின் நியூயார்க் மாகாண கவர்னர் ஆண்ட்ரூ குவாமோ அரசு ஊழியர்கள் உட்பட பல பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்திருப்பது தனி விசாரணையில் தெரியவந்துள்ளது' என, நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெடிஷியா ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.


நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ குவாமோ பாலியல் ரீதியில் தங்களை துன்புறுத்தியதாக பல பெண்கள் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் புகார்களை தெரிவித்தனர். இந்த புகார்கள் தொடர்பாக 179 பெண்களிடம் அதிகாரிகள் முதல்கட்ட விசாரணை நடத்தினர். இந்த பாலியல் புகார்கள் குறித்து வழக்கறிஞர்கள் மூலமாக சுதந்திரமான விசாரணையை நடத்த லெடிஷியா ஜேம்சுக்கு கவர்னர் அலுவலகம் பரிந்துரைத்தது.


அதனடிப்படையில் வழக்கறிஞர்கள் ஜூன் ஹெச்.கிம், ஆன்னி எல்.கிளார்க் ஆகியோர் தலைமையலான விசாரணைக் குழுவை ஜேம்ஸ் நியமித்தார். இந்தக் குழு தனது விசாரணை அறிக்கையை நேற்று (ஆக., 3) வெளியிட்டது. அதில், நியூயார்க் கவர்னர் பல பெண்களுக்கு பாலியல் ரீதியில் துன்புறுத்தல் அளித்தது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஜேம்ஸ் கூறுகையில், 'மாகாண கவர்னர் சட்டத்தை மதிக்காமல் பல பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்திருப்பதாக விசாரணைக் குழு அறிக்கை சமர்ப்பித்திருக்கும் இந்த தினம், நியூயார்க் நகருக்கு மிக மோசமான நாளாகும்' என்றார்.