ரைட் திரைப்படத்தின் திரைவிமர்சனம்.

01.10.2025 07:05:00

ஆர்டிஎஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “ரைட்” . பொலிஸ் நிலையத்தை  மையமாகக் கொண்டு, சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் செப்டம்பர் 26ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது.

 

இத்திரைப்படத்தில்  நட்டி, அருண் பாண்டியன், மூணாறு ரமேஷ், அக்சரா ரெட்டி, யுவினா, வினோதினி, அக்ஷரா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அத்துடன் குணா சுப்ரமணியன் இத் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளதுடன்  பத்மேஷ் மார்தாண்டன் இத் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கதை:

கோவளம் பொலிஸ் நிலையத்தில் – சாதாரணமாக நடக்கும் சில சம்பவங்கள் திடீரென பரபரப்பை உருவாக்குகின்றன.
அருண் பாண்டியன் தனது மகன் காணவில்லை என்று புகார் கொடுக்க வருகிறார். அதே சமயம், திருமண பத்திரிகை கொடுக்க சப்-இன்ஸ்பெக்டர் அக்ஷரா ரெட்டி வருகிறார்.

அந்த நேரத்தில், வெளியில் இருந்து கணினி மூலம் ஒரு மர்ம நபர் பொலிஸ் நிலையத்தை  தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார். அவர் வைத்திருக்கும் வெடிகுண்டு எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடிய சூழல். உள்ளே சிக்கியிருக்கும் பொலிஸ் , குற்றவாளிகள், பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல முடியாத சூழல்.

அவரின் கோரிக்கைப்படி, நீதிபதி வினோதினி பொலிஸ் நிலையத்தின் ஒரு பழைய வழக்கை விசாரிக்கிறார். அந்த வழக்கே கதையின் மையமாக மாறுகிறது. வெடிகுண்டு  வெடித்ததா? அந்த மர்ம நபர் யார்? அவர் எதற்காக இப்படிச் செய்கிறார்? அருண் பாண்டியனின் மகன் கிடைத்தானா? என்பதே படத்தின் சஸ்பென்ஸ்.


நடிப்பு:

  • அருண் பாண்டியன் – ஆரம்பத்தில் ஓவராகத் தோன்றினாலும், ஒரு கட்டத்தில் அவரேவெடிகுண்டு  வைத்திருக்கலாம் என்கிற சந்தேகம் எழுகிறது. அந்த ட்விஸ்டை அவர் நடிப்பால் உயிர்ப்பிக்கிறார்.

  • அக்ஷரா ரெட்டி – சப்-இன்ஸ்பெக்டராக தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

  • மூணாறு ரமேஷ் – பொலிஸ் அதிகாரி  கதாபாத்திரத்தில் நடத்துள்ள அவருக்கு அக்கதையினை உயிர்ப்புடன் கொண்டு செல்வதற்கு பெரும் பங்காற்றியுள்ளார்.  அவரது  சிறப்பான நடிப்பு பார்வையாளர்களை மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

  • தங்கதுரை – திருடனாக நகைச்சுவை செய்து  சிரிக்கவைக்கிறார். ஆனாலும் சீரியஸான சூழலில் அது சில நேரங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

  • நட்டி – பொலிஸ்  இன்ஸ்பெக்டராக அதிகம் இல்லாத வேடம்தான். ஆனால் கிளைமாக்ஸில் வந்து கதையை திருப்பி விடுகிறார்.

  • வினோதினி – நீதிபதியாக ஆக சீரியஸ்ஸான கதாபாத்திரத்தில்  வந்தாலும், வழக்கமான மேனரிசம் சீரியஸான உணர்ச்சியை சீர்குலைக்கிறது.

  • யுவினா – முக்கியமான கதாபாத்திரமாக இருந்தாலும், தமிழ் சினிமாவில் பார்த்த பழக்கமான சித்திரிப்பே.


தொழில்நுட்பம்:

  • ஒளிப்பதிவு – பத்மேஷ் மார்தாண்டன் போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளை இயல்பாக படம்பிடித்திருக்கிறார்.

  • இசை – குணா சுப்ரமணியனின் பின்னணி இசை சராசரி. த்ரில்லுக்கு வேகமோ, உணர்ச்சிக்கு ஆழமோ கொடுக்கவில்லை.

  • இயக்கம் – சுப்ரமணியன் ரமேஷ்குமார் கதை, ட்விஸ்ட், பாம் வெடிப்பு, நீதிமன்றம் ஸ்டேஷனுக்குள் அமைவது போன்ற சுவாரஸ்யமான புள்ளிகளை கொண்டு வந்திருக்கிறார். ஆனால் அதை முழுக்க சீரியஸாக நடத்தாமல், லைட்டாக கையாண்டு இருப்பதால்  எதிர்பார்த்த தாக்கம் வரவில்லை.

பொலிஸ் நிலையத்தை   மையமாக வைத்து பல படங்கள் வந்தாலும், ரைட் சில வித்தியாசங்களைக் காட்டுகிறது. ஆனாலும், அதை முறையாகச் சொல்லாததால், சஸ்பென்ஸ்-திரில்லர் சுமாரான எண்டர்டெயினராக மட்டுமே முடிகிறது.