"இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” .

15.06.2026 08:40:08

அதிமுக மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல் என்றும் இன்னும் பல சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைவார்கள் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்று, பிறகு தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்த மதுராந்தகம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் ஏற்பாட்டில் மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணையும் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

   

இதில் தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் பங்கேற்று மாற்றுக்கட்சியினரை வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "ஒரு எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் இருக்கின்ற இடமே தெரியாமல் மக்கள் தூக்கி எறியப்பட்டிருப்பவர் இன்று அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். அதுதான் வேதனையாக இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவரை விரட்டி அடித்த பெருமை தவெகவுக்கு வந்து சேரும். அதற்குமேல், எடப்பாடி பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் நம் சின்னம் அங்கு நின்றிருந்தால், அவருக்கு அதே நிலைமைதான்.

மரகதம் குமரவேல் இங்கு குதிரை பேரம் பற்றி பேசினார். ஆனால், திமுக - அதிமுக இணைந்து ஆட்சியை கொண்டுவரலாம் எனும் கொல்லை பேர அரசியல் நடந்தது. அதனை முறியடிக்கக்கூடிய திறமை தளபதி விஜய்க்கு உண்டு. கட்சிக்காக 42 ஆண்டுகள் ஓடிய பிறகும் தூக்கி அடிக்கப்பட்ட என்னை, தாங்கியவர் விஜய். பழமையை மறந்துவிட்டதால் எடப்பாடி பழனிசாமி தேய்ந்து வருகிறார். அதிமுக மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல். இனி அதிமுக என்ற கட்சியே இருக்காது. முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வருகிறார்கள். இன்னும் எம்.எல்.ஏ.க்களும் வருவார்கள்" எனப் பேசினார்.