ஈரானில் அடுத்தடுத்து 7 முறை நிலநடுக்கம்!

17.06.2022 06:02:03

ஈரானில் அடுத்தடுத்து 7 முறை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கத்தால் வீடுகள், வணிக வளாகங்கள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். 

ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் கிஷ் தீவு உள்ளது. இங்கு நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவானது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இவை அனைத்தும் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவாகின. 

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம், கிஷ் தீவை கடுமையாக உலுக்கின. வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.  மேலும் மின் சாதனப் பொருட்கள் சேதமடைந்தன. 

இதனால் பீதியடைந்த மக்கள், அலறியடித்தபடி வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களை விட்டு வெளியே ஓடி வந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. 

இதனிடையே பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள துபாய், கத்தார் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.