சிபியூ ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் சுமித் நாகல் வெற்றி
சாலஞ்சர் சிபியூ ஓபன் டென்னிஸ் முதல் சுற்றுப்போட்டியில் இந்திய வீரர் சுமித் நாகல் வெற்றி பெற்று, 2ம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ரொமேனியாவின் சிபியூ நகரில் சாலஞ்சர் சிபியூ ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.
நேற்று இரவு நடந்த முதல் சுற்றுப்போட்டியில் இந்திய வீரர் சுமித் நாகலும், ஆஸ்திரியாவின் இளம் வீரர் லூகாஸ் மீட்லெரும் மோதினர். இதில் 6-3, 6-1 என நேர் செட்களில் சுமித் நாகல், லூகாசை வீழ்த்தி, 2ம் சுற்றுக்கு (காலிறுதிக்கு முந்தைய சுற்று) முன்னேறினார்.
நாளை மாலை நடைபெறவுள்ள காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் சுமித் நாகல், செக் குடியரசின் ஜின் லெஹெஸ்காவுடன் மோதவுள்ளார். மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் கிரீஸ் நாட்டின் இளம் வீரர் பெட்ரோஸ் சிட்சிபாசும், போஸ்னியா வீரர் டேமிர் சம்ஹரும் மோதினர்.
இதில் சம்ஹர் 6-2, 6-0 என நேர் செட்களில் வெற்றி பெற்று, 2ம் சுற்றுக்கு தகுதி பெற்றார். சோபியா ஓபனில் போபண்ணா தோல்வி பல்கேரியாவில் நடந்து வரும் சோபியா ஓபன் டென்னிஸ் இரட்டையர் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் ரோஹன் போபாண்ணா-பாகிஸ்தானின் ஐசம் உல் ஹக் குரேஷி ஜோடி, ஆஸ்திரியாவின் ஒலிபர் மராக்-பிலிப் ஆஸ்வால்ட் ஜோடியுடன் மோதியது. இதில் கடுமையான போராட்டத்திற்கு பின்னர் 2-6, 7-6, 7-10 என 3 செட்களில் போபண்ணா-குரேஷி ஜோடி, மராக்-ஆஸ்வால்ட் ஜோடியிடம் வீழ்ந்தது.