கட்டிடக்கலைக்கு கிடைத்திருந்த அங்கீகாரத்தை மீண்டும் பெற வேண்டும்

05.08.2023 19:17:33

இலங்கையை உலக அரங்கிற்கு கொண்டுச் சென்ற பிரசித்தமான நிர்மாணங்களான  ருவன்வெலிசாய, அபயகிரிய, ஜேதவனாராமய உள்ளிட்ட நிர்மாணங்கள் ஊடாக  இந்நாட்டு கலைஞர்கள் உருவாக்கிய தரத்தை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டுமெனவும், அதற்கு அவசியமான வசதிகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளதெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதேபோல், எதிர்கால காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பதற்கு உகந்தான கட்டிட நிர்மாணங்கள் இலங்கைக்கு அவசியப்படுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.  

கொழும்பு சினமன் கிரேண்ட ஹோட்டலில் இன்று (05) நடைபெற்ற கட்டிடக் கலைஞர்களின் சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

"கட்டிக்கலை : நிலைப்புக்கான தாக்கம்" என்ற தொனிப்பொருளின் கீழ், பிரித்தானிய கட்டிடக்கலைஞர்களின் றோயல் நிறுவனமான (RIBA) இலங்கையின் அமெரிக்க வாஸ்த்து சாஸ்த்திர நிறுவனம் (AIA) இலங்கைக்கான இத்தாலி தூதரகம் ஆகியன இணைந்து மேற்படி சர்வதேச மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்ததோடு, 350க்கும் மேற்பட்ட இலங்கை, தெற்கு மற்றும் தென்கிழக்காசிய கட்டிக்கலைஞர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.  

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

இலங்கையின் கட்டிடக்கலைஞர்களால் பல வருடங்கள் நிலைக்கக்கூடிய நிர்மாணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இலங்கை கட்டிடக்கலை வரலாற்றினை பார்க்கும் போது பெருமை மிக்க சின்னங்கள் பல எமக்கு இருக்கின்றன.  ருவன்வெலிசாய, அபயகிரிய, ஜேதவனாராமய உள்ளிட்ட நிர்மாணங்கள் இலங்கையை உலக அரங்கிற்கு கொண்டுச் சென்ற நிர்மாணங்களாகும்.  

சீகிரியா இந்நாட்டின் பிரமிக்கத்தக்க அதேபோல் வாஸ்து சாஸ்திரத்திற்கு அமைவான நிர்மாணமாகும். பொலன்னறுவையில் காணப்படும் பிரமிக்கத்தக்க நிர்மாணங்களும் 2000  வருட வரலாற்று பாரம்பரியத்தை கொண்டவையாகும்.

அதேபோல், 19 ஆம் நூற்றாண்டின், கண்டி திரித்துவக் கல்லூரி ஷெபல் அரங்கம், களனி விகாரை, லேக் ஹவுஸ் கட்டிடம், பேராதனைப் பல்கலைக்கழகம், சுதந்திர சதுக்கம்,  ஜெப்ரி பாவா நிர்மாணித்த இலங்கைப் பாராளுமன்றம் ஆகியனவும் இலங்கையின் பிரம்மிக்கதக்க படைப்புக்களின் சிலவாக விளங்குகின்றன.  

கடந்த இரு வருடங்களில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியினால் கட்டிடநிர்மாணத்துறையும் பாதிப்புக்களை எதிர்கொண்டது.  நிர்மாணத்துறையில் ஆயிரக்கணக்கானோர் தொழிலை இழந்தனர்.

சரியான நகர திட்டமிடல்கள் ஊடாக அனைத்து நகரங்கயைும் அழகிய நகரங்களாக மாற்றியமைப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

அதற்கான புதிய சட்டமொன்றும் உருவாக்கப்படவுள்ளது. அந்த நகர திட்டமிலுக்கு குறைந்தபட்சம் 10,000 பொறியியலாளர்கள் அவசியப்படுவர். அதேபோல் கட்டிடக் கலைஞர்களும் தகவல் தொழில்நுட்ப நிபுணர்களும் அவசியப்படுவர்.

கண்டி நகரத்தில் சிறந்த நகர திட்டமிடல் ஒன்றை மீண்டும் முன்னெடுப்பதற்காக ஜப்பான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். அந்த நகர திட்டமிடலை பேராதனை வரையில் விரிவுபடுத்த வேண்டும். அதேபோல் இன்னும் பல நகரங்கயைும் அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. அந்த அனைத்து சவால்களையும் ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராகுங்கள்.  

மேலும், காலநிலை அனர்த்தங்களை வெற்றிக்கொள்ளும் இலக்குகளுக்கு முகம்கொடுக்க இலங்கை தயாராக உள்ளது. 2016 ஆம் ஆண்டில் அந்த பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு அதற்கான அர்பணிப்புக்களை செய்தோம். காலநிலை அனர்த்தங்களுக்கு முகம் கொடுப்பது தொடர்பிலான நிகழ்ச்சி நிரலை துரிதப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் உறுப்பு நாடுகளிடத்தில் கோரிக்கை விடுத்தார்.  இன்று ஐரோப்பாவில் பாரிய காட்டுத்தீ பரவியுள்ளது.  அதனால் 2050 முன்னதாக அந்த சவாலை வெற்றிகொள்ள அது தொடர்பிலான ஆய்வுகளை ஆரம்பித்துள்ளனர்.  

அதேபோல் கட்டிடக் கலைஞர்களும் காலநிலை அனர்த்தம் தொடர்பிலான நியதிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். எதிர்கால காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பதற்கு உகந்த நிர்மாணிப்புக்களை வடிவமைக்க வேண்டும். அது தொடர்பில் உரிய தரத்தை உருவாக்கும் பொறுப்பும் உங்களை சார்ந்துள்ளது.

இந்நாட்டில் நிர்மாணிக்கப்படவிருக்கும் காலநிலை அனர்த்தங்கள் தொடர்பிலான பல்கலைக்கழகத்தில் உள்ளடக்க வேண்டிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் நாம் அறிந்துக்கொண்டுள்ளோம்.

அண்மைய காலங்களில் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிர்மாணங்களை 1000 - 2000 வருடங்கள் வரையில் பாதுகாக்க முடியாது.

அதனால் முன்னைய காலங்களில் நாட்டின் கட்டிடக்கலைக்கு கிடைத்திருந்த அங்கீகாரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்." எனத் தெரிவித்தார்.