மக்களுக்கு 4 முக்கிய வாக்குறுதிகளை அளித்த முதல்வர் ஸ்டாலின்!

16.01.2026 14:13:20

திருவள்ளுவர் தினத்தை ஒட்டி தமிழ்நாட்டு மக்களுக்கு 4 வாக்குறுதிகளை அளித்துள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின். சமூக அநீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் துணிச்சல் தொடரும் என்பது உள்ளிட்ட 4 வாக்குறுதிகளை தருவதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தை முதல் நாள் பொங்கல் பண்டிகை, நேற்று தமிழர் திருநாளாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்கு அடுத்த நாள் விவசாயிகளுக்கு உழவுக்கு உதவி செய்த மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் இன்று கொண்டாடப்படுகிறது.

மனிதன் அறநெறி கொண்டு வாழ வேண்டும் என்று வாழ்க்கைக்குத் தேவையான கருத்துகளை ஈரடிக் குறளில் சொல்லி, முப்பால் தந்து நல்வழிப் படுத்திய திருவள்ளுவர்க்கு மரியாதை செலுத்தும் விதமாக 'திருவள்ளுவர் தினம்' இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவள்ளுவர் தினத்தை ஒட்டி தமிழக மக்களுக்கு 4 வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், "அஞ்சாமை மனிதநேயம் அறிவாற்றல் ஊக்கமளித்தல் - வள்ளுவன் சொன்ன இவை நான்கும் நமது ஆட்சியின் அடிநாதம்!

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்

எஞ்சாமை வேந்தர்க் கியல்பு

- திருவள்ளுவர்

சமூக அநீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் துணிச்சல். வறியோர் எளியோர் வாழ்வுயர மனிதநேயத் திட்டங்கள். இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள் தொழில் வளர்ச்சிக்கும், மகளிர் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் ஆக்கப் பணிகள். இவை நான்கும் தமிழ்நாட்டில் தொடரும் என்பது இந்த திருவள்ளுவர் தினத்தில் உங்களுக்கு நான் தரும் வாக்குறுதி!" என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திருக்குறளைக் குறிப்பிட்டு, 4 வாக்குறுதிகளை தமிழக மக்களுக்கு அளித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.