மீண்டும் ஆபத்தான நிலைக்குள் இலங்கை!

19.05.2026 08:11:12

உலகளாவிய ரீதியில் நிலவும் போர் மற்றும் நிச்சயமற்ற சூழலால், இலங்கை மீண்டும் ஒரு அபாயகரமான நிலையை எதிர்நோக்கியுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.

    

 

பாராளுமன்ற நிதிக் குழுவின் (COF) தற்காலிகத் தலைவர் ரவூப் ஹக்கீம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஆளுநர் இதனைத் தெரிவித்தார். தற்போதைய உலகளாவிய போர் பதற்றங்களுக்கு மத்தியில், எதிர்கால மாதாந்த முன்னறிவிப்புகளை (Forecasts) வெளியிடுவது கடினமாக உள்ளதாகவும், நிலைமைகள் மிக வேகமாக மாறி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவைக் காட்டிலும் இலங்கைக்கு இந்த அச்சுறுத்தல் அதிகம் என்பதை விளக்கிய அவர் பின்வரும் முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்:

700 பில்லியன் டொலர் கையிருப்பு வைத்துள்ள இந்தியாவிலேயே, பிரதமர் நரேந்திர மோடி எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

உலகளாவிய நெருக்கடி தொடர்ந்தால், குறைந்த கையிருப்புள்ள இலங்கை போன்ற நாடுகள் மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்கும்.

இந்தியா ஏற்கனவே தனது அரசு ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய (Work From Home) ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இலங்கையிலும் அத்தியாவசியமற்ற எரிபொருள் பாவனையைக் குறைப்பது கட்டாயமாகும் என ஆளுநர் வலியுறுத்தினார். இது தொடர்பாகப் பேசிய நிதிக் குழுவின் தலைவர் ரவூப் ஹக்கீம், இந்தியாவைப் போன்று இலங்கையிலும் அரச ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பது குறித்து நிதி அமைச்சு அவசரமாக கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

உலகளாவிய நிச்சயமற்ற தன்மை தொடருமானால், இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படலாம் என்பதால், மக்கள் மற்றும் அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.