'ஹார்முஸ் முற்றுகையை அமெரிக்கா நீக்காது'.

21.04.2026 08:26:22

ஈரானுடன் ஒரு உடன்பாடு எட்டப்படும் வரை, அந்த நாட்டின் துறைமுகங்கள் மீதான தங்களது முற்றுகையை அமெரிக்கா நீக்காது என்று ஜனாதிபதி டோனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய பேச்சுவார்த்தைகள் நடைபெறுமா என்பது குறித்த நிச்சயமற்ற நிலை தொடரும் வேளையில் ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கிய இந்த முற்றுகை, ஈரானை முற்றிலுமாக அழித்து வருகிறது என்று டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல்' சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

புதன்கிழமை அன்று தற்காலிக அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தம் முடிவடைய உள்ள நிலையில், ட்ரம்ப் இதை தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், முற்றுகை தொடங்கியதிலிருந்து, அமெரிக்கப் படைகள் 27 கப்பல்களைத் திரும்பிச் செல்லவோ அல்லது ஈரானியத் துறைமுகத்திற்குத் திரும்பவோ உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை முற்றுகையை மீறிச் செல்ல முயன்ற ஈரான் தொடர்புடைய சரக்குக் கப்பல் ஒன்றை, இந்த மோதலில் முதல் முறையாக அமெரிக்கா இடைமறித்துக் கைப்பற்றியது.

ஈரான் இதனை ஒரு கடற்கொள்ளைச் செயல் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான நிலையற்ற போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மீறல் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஈரான், ஹார்முஸ் நீரிணையில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகத் தனது முற்றுகையைத் தொடர்ந்து வருவதால், உலகளாவிய எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

இந்த நிலையில், அமெரிக்கா தங்களது துறைமுகங்கள் மீதான முற்றுகையை விலக்கிக்கொள்ளும் வரை, ஹார்முஸ் நீரிணையை மூடியே வைத்திருக்க முடிவு செய்துள்ளதாக ஈரான் கூறியுள்ளது.