ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிளவுபட்டுள்ளது.

20.07.2021 21:31:13

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிளவுபட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இது தொடர்பான விவாதம் நேற்று (19) திங்கட்கிழமையும், இன்று (20) செவ்வாய்க்கிழமையும் இடம்பெற்றது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு இன்று மாலை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், குறித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.

எனினும் அக்கட்சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசீம், எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.எஸ்.தௌபீக் மற்றும் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோர் இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிரான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவளித்த குறித்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையிலேயே அவர்கள் குறித்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. எனினும் அக்கட்சியின் தலைவரான ரவூப் ஹக்கீம், தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.