ஜனாதிபதி அநுரகுமாரவின் 56 ஆவது பிறந்த தினம் இன்று!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்றைய தினம் தனது 56 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்.
இவர் இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டம் கலேவலை என்னும் ஊரில் 1968 நவம்பர் 24 இல் பிறந்தார்.
அநுரகுமார தனது பாடசாலைக் கல்வியை தம்புத்தேகமை காமினி மகா வித்தியாலயத்திலும், தம்புத்தேகமை மத்திய கல்லூரியிலும் கற்றார்.
தனது பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான முதலாவது மாணவராக விளங்கிய இவர் பாடசாலை நாட்களில் இருந்தே மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளராக இருந்ததோடு, அக்கட்சியில் 1987 இல் இணைந்து, மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நுழைந்த அவர் சில மாதங்களுக்குப் பிறகு அச்சுறுத்தல் காரணமாக வெளியேறி ஓராண்டு கழித்து 1992 இல் களனி பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டு, 1995 இல் இளம் அறிவியல் பட்டத்துடன் வெளியேறினார்.
2000 இல் நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து கட்சியின் தேசியப் பட்டியலில் நாடாளுமன்றம் சென்றார். 2001 தேர்தலில் மீண்டும் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரானார்.
பின்னர் 2015 செப்டம்பர் முதல் 2018 டிசம்பர் வரை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் தலைமைக் கொறடாவாகப் பணியாற்றினார்.
2014 பெப்ரவரி 2 அன்று, மக்கள் விடுதலை முன்னணியின் 17ஆவது தேசிய மாநாட்டின் போது, சோமவன்ச அமரசிங்கவிற்குப் பின், கட்சியின் புதிய தலைவராக அநுரகுமார திசாநாயக்க நியமிக்கப்பட்டார்.
2019 ஓகஸ்ட் 18 ஆம் திகதியன்று, மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான அரசியல் கூட்டமைப்பான தேசிய மக்கள் சக்தி, 2019 ஜனாதிபதி தேர்தலில் அநுர தனது ஜனாதிபதி வேட்பாளராக இருப்பார் என்று அறிவித்தது.
இத்தேர்தலில் திசாநாயக்க 418,553 (3%) வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றார்.
மீண்டும் 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு 5,634,915 வாக்குகளைப் பெற்று இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகக் தெரிவானார்.