தமிழ் மக்கள் என்னை ஆதரித்தது தவறெனக் கூற முடியாது

06.05.2021 10:37:59

தமிழ் மக்கள் என் மீது நம்பிக்கை வைத்திருந்த காரணத்தினாலேயே 2010 ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் என்னை ஆதரித்தனர். இது தொடர்பாக பெருமைப்பட வேண்டுமே ஒழிய அவர்கள் செய்தது தவறெனக் கூற முடியாது என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற நாட்டின் கொவிட் நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
கொவிட் நிலைமைகளில் இராணுவத்தின் பங்களிப்பை நான் எப்போதும் விமர்சித்ததில்லை. அவர்களின் ஒத்துழைப்புகள் அவசியம். அதேபோல் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது என்றால் அதற்குப் பிரதான காரணம் நாம் கடன்காரராக மாறியமையேயாகும். சீனாவிடம் அளவுக்கு அதிகமான கடன்களைப் பெற்றுக்கொண்டு அதனை கட்ட முடியாத நிலைமை உருவாகியுள்ளது. அதேபோல் தேசிய பாதுகாப்பு என்பது மக்களை எமாற்றுவதல்ல, உணர்வுடன் அதனைக் கையாள வேண்டும்.

ஆனால் இந்த அரசாங்கம் தேசிய பாதுகாப்பு குறித்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்ல. ஈஸ்டர் தாக்குதலில் நௌபர் மௌலவி மீது குற்றம் சுமத்தி தப்பித்துக்கொள்ள நினைக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. அதேபோல் தாக்குதல் குறித்த உண்மையான குற்றவாளிகளைக் கண்டறியாது, எம்மை அடக்கவே நினைக்கின்றனர்.

கரன்னாகொட 11 மாணவர்களைக் கொலை செய்தமை குறித்து நான் சபையில் கூறியவுடன் தமிழினியின் புத்தகத்தைக் கூறி நியாயப்படுத்தினர். இராணுவம் என்பதற்காக, யுத்தம் செய்தமைக்காக கொலைகளைச் செய்ய முடியாது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் கொலையாளியான சுனில் ரத்னாயக்கவை நியாயப்படுத்தி அமைச்சர் வீரசேகர சபையில் பேசுகின்றார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்பதற்காக எதனையும் கூறிவிட முடியாது. வீரசேகரவுக்கு வேலை பெற்றுக்கொடுத்து, அவருக்கான பாதுகாப்பைக் கொடுத்தவன் நான். அந்த நன்றியை மறந்து இன்று எம்மைக் குற்றவாளியாக்குகின்றனர்.

அதேபோல் தமிழ் மக்கள் எனக்கு வாக்களித்ததில் என்ன தவறுள்ளது? யுத்தத்தை சரியாகச் செய்த காரணத்தினால், என் மீது நம்பிக்கை வைத்ததால், தமிழ் மக்கள் இராணுவத்தை வெறுக்காத காரணத்தால் என்னைத் தமிழர்கள் ஆதரித்தனர். அதற்கு பெருமைப்பட வேண்டும். மாறாக அவர்கள் செய்தது தவறெனக் கூற முடியாது என்றார்.