மதம், மொழியினால் சட்டத்தில் பாரபட்சம் இருக்கக்கூடாது!

07.02.2026 14:30:21

மொழி மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்டு சட்டத்தை பாவிக்க கூடாது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவசரகால சட்டம் கடந்த காலங்களில் எமது மக்களுக்கு எதிராக மிக மோசமாக பயன்படுத்தப்பட்டது. பயங்கரவாத தடைச்சட்டம் மனித குலத்துக்கு எதிரானதுடன், மனித உரிமைகளுக்கும் எதிரானது. அவசரகால சட்டத்தின் ஒரு பகுதியாக காணப்படும் பயங்கரவாத தடைச்சட்டத்தை தவறாக பயன்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

பாதிக்கப்பட்ட தரப்பினர் என்ற அடிப்படையில் அவசரகால சட்டத்தையும், பயங்கரவாத தடைச்சட்டத்தையும் தொடர்ச்சியாக எதிர்ப்போம். பயங்கரவாத தடைச்சட்டத்தை ஆட்சிக்கு வந்தவுடன் முழுமையாக இரத்துச் செய்வோம் என்று இந்த அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால் இன்று பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக பிறிதொரு சட்டவரைபு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பயங்கரவாத தடைச்சட்டத்தை காட்டிலும் பாரதூரமானது.

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவில் பயங்கரவாதம் என்பதற்கு முறையான வரைவிலக்கணம் வழங்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் அரசாங்கம் நினைக்கும் அனைத்தும் பயங்கரவாதம் என்ற கட்டமைப்புக்குள் உள்வாங்கலாம்.ஆகவே பயங்கரவாத தடைச்சட்டம் மனித குலத்துக்கு முற்றிலும் எதிரானது.

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தேரர்கள் பற்றி எதிர்க்கட்சியினர் சபையில் பேசினார்கள். சட்டத்தின் முன் அனைவரும் இந்த நாட்டில் சமம். மத குருமாரோ அல்லது சிவில் பிரஜைகளோ அனைவரும் பொதுசட்டத்துக்கு உட்பட்டவர்கள். சட்டத்தின் முன் பாரபட்சம் காட்டப்பட கூடாது.

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் சட்டம் முறையாக செயற்படுவது பாராட்டத்தக்கது. பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பல இந்து குருமார்கள் சிறையிலே இறந்தார்கள்.ஆகவே மொழி மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்டு சட்டத்தை பாவிக்க கூடாது. என்று கேட்டுக் கொள்கிறோம் என்றார்.