பாடசாலை சிறுவன் மர்ம மரணம் - மேற்பார்வையாளரான பெண்ணிற்கு விளக்கமறியல்

05.12.2023 04:00:00

அம்பாறையில் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் வழக்கை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் கடந்த மாதம் 17ஆம் திகதி மணி ஒன்றை களவு செய்ததாக குற்றச்சாட்டின் பெயரில் கொக்குவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின் நீதிவானின் உத்தரவின் பிரகாரம் குறித்த காப்பகத்தில் பாதுகாப்பிற்காக தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

இந்த மரணம் தொடர்பில் சிறுவனின் தந்தை தெரிவிக்கையில், குறித்த சம்பவத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தவர் மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த ஆனந்ததீபன் தர்சான்ந் எனும் 14 வயதுடைய மதிக்கத்தக்க சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சிறுவனின் மர்ம மரணம் தொடர்பில் சிறுவனின் உடலில் காயத் தழும்புகள் இருப்பதனால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் தெரிவித்ததை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம் மரணமானது தாக்குதலினால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் உட்காயங்களினால் மரணம் சம்பவித்துள்ளமை தெரியவந்துள்ளது.

 

இந்நிலையில் குறித்த சிறுவன் தங்க வைக்கப்பட்டிருந்த காப்பகத்தில் சம்பவ தினத்தில் இரவு உணவினை உட்கொண்ட பின்னர் பாடசாலை வளாகத்தில் நின்றதாகவும் பின்னர் என்ன நடந்தது என தெரியவில்லை என முரண்பாடான வாக்குமூலங்கங்கள் வழங்கியதை தொடர்ந்தே சந்தேகத்தின் பேரில் பாடசாலை மேற்பார்வையாளரான குறித்த பெண் பொலிஸ் விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருந்தார்.